மானிப்பாய் தனு ரொக்கை சுற்றிவளைத்து பிடித்தது பொலிஸ்!

manipay police station
manipay police station

மானிப்பாயில் தனு ரொக் என்ற இளைஞனின் வீட்டைச் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து பெருமெடுப்பில் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர்.

மானிப்பாய் லோட்டன் வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அதிகாலையில் சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையயான்றை மேற்கொண்டனர்.

அதிகாலை 5.45 மணியளவில் பஸ் ஒன்றில் வந்த சுமார் 25 இக்கும் மேற்பட்ட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அந்த வீட் டைச் சுற்றிவளைத்து அங்கு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சோதனை மேற்கொள்ளப்பட்டவேளை அந்த வீட்டில் தாயாரும் மகளும் மகனும் இருந்ததனர்.

குடும்பத் தலைவர் கொழும்புக்கு சென்றிருந்தார் எனத் தெரிய வருகின்றது.

பெண் பொலிஸாரும் அந்தச் சுற்றிவளைப்புக்குச் சென்றிருந்தனர். அவர்களால் வீட்டில் இருந்த பெண்கள் உடற்சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்திய அதிரடிப்படையினரால் வீட்டு வளவிலிருந்ததாகத் தெரிவித்து 03 துருப்பிடித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்த வீட்டிலிருந்த இளைஞன் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர் அதிரடிப்படையினரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த இளைஞர் மீது வன்மமான முறையில் பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இவ்வாறு 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பல வழக்குகளில் இளைஞர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தால் பொலிஸார் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட முரணான வகையில் இளைஞர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக இதற்கு முன்னரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.