யாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 73 பேர் பாதிப்பு; 8 வீடுகள் சேதம்

8 7d
8 7d

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலையிலிருந்து அதிகரித்த வேகத்தில் காற்று வீசி வருகின்றது. நேற்று இதன் தாக்கம் அதிகளவாக இருந்தது.

பலமான காற்றால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிப்படைந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பல வாழைத்தோட்டங்களில் இருந்த வாழைகள் குலையோடு முறிந்து வீழ்ந்துள்ளன.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவிக்கையில்,

“வங்கக் கடலில் உருவான அம்பான் புயலின் தாக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலும் காற்றின் தாக்கமானது கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் உயர்வானதாகக் காணப்பட்ட்து.

நீர்வேலி, கோப்பாய், அச்சுவேலி, திருநெல்வேலிப் பகுதிகளில் வாழை மரங்கள் குலையோடு சரிந்து வீழ்ந்துள்ளன. பயன்தரு மரங்களும் அழிவடைந்துள்ளன.

யாழ்.மாவட்டத்தில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன. கைதடிப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளது.

மயிலிட்டிப் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்து பெண் ஒருவர் காயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் காலநிலையானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு எதிர்ப்பார்ப்பதால் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும். கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும்” – என்றார்.