வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்களை திருடிவந்தவர் கைது

1590149865895 IMG 31
1590149865895 IMG 31

வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்களை அண்மைக்காலமாக திருடிவந்த ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புதுப்பள்ளி பகுதியில் வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்கள் களவாடப்படுவதாக ஒரு மாதத்திற்கு முன்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் தௌபீக் குழுவினர் ஒரு மாதகாலமாக நடாத்திய புலன்விசாரணையின் அடிப்படையில் களவாடப்பட்ட ரூபா 1 இலட்சம் பெறுமதியான வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்கள் சம்மாந்துறை நகரப்பகுதியில் உள்ள இரும்புக்கடை ஒன்றில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (22) மீட்கப்பட்டது.

இதே வேளை குறித்த இயந்திர உதிரிப்பாகங்களை களவாடி குறித்த இரும்புக்கடைக்கு விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவர் இன்று கைதாகியுள்ளார்.

இவ்வாறு கைதான நபர் சம்மாந்துறை வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றிய நிலையில் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்றும்
தற்போது ஹெரோயின் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.

மேலும் குறித்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை செய்து வரும் பொலிஸார் மேலும் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளாரா என ஆராயப்பட்டு வருவதாகவும் அதே சமயம் கைதான சந்தேக நபர் மற்றும் தடயப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நாளை பாரப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.