நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம் – தேர்தலுக்கு தயார் – சம்பந்தன்

sampanthar 2
sampanthar 2

“நாடாளுமன்றத் தேர்தலை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான பரிசீலனையில் உயர்நீதிமன்றம் எடுத்துள்ள இறுதியான முடிவை நாம் மதிக்கின்றோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் தயாராக இருக்கின்றது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், மனுக்கள் மீது 10 நாட்கள் மேற்கொண்ட பரிசீலனைகளின் பின்னர் அவற்றைத் தள்ளுபடி செய்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த இறுதியான முடிவை நாம் மதித்தே ஆக வேண்டும். எனவே, இந்த முடிவை நாம் மதிக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தல் எமக்குச் சவால் அல்ல. நாம் எந்தவேளையிலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்” – என்றார்.