பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ; இ.கதிர்

20200616 111557
20200616 111557

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க பல சக்திகள்செயற்படுகின்றன எனத் தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழவேண்டுமானால் கூட்டமைப்பினை நடைபெறவுள்ள தேர்தலில் பலப்படுத்தவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலதுகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி உருவாக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளை அரசியலுக்குக் கொண்டுவரவே தனித்துவமாக எமது கட்சி உருவாகியது.

ஆரம்ப காலத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டபோராளிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம் வலியுறுத்தி வந்தார்.

அவ்வாறான நிலையில் எமது கட்சி உருவாக்கம் பெற்ற பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.

இன்றுவரை எம்மை இணைத்துச் செயற்படவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கும் முரண்பட்ட கருத்துக்கள் எவையும் இல்லை நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியா? எம்மைப் பயன்படுத்துகின்றனரா என வெளியில் பலர் கேள்வி கேட்கின்றனர்.

எம்மை யாரும் பயன்படுத்த முடியாது தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கையான தொடர்பினை நாம் வைத்துள்ளோம். தமிழரசுக் கட்சியலுள்ள சுமந்திரனுடன் கூட எமக்கு எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை.

நாம் பங்காளிக் கட்சிகளாக இருந்ததில்லை ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கபலமாக அனுசரணையாக இருப்போம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க பல சக்திகள் செயற்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வடகிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்.

நடைபெறவுள்ளபொதுத்தேர்தலிலும் நாம் வடகிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்யவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். நாம் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிந்து நின்று எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது.

ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியது தவறு அவர்கள் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதால் எம்மால் பேசமுடியவில்லை என்று குற்றம் சாட்டினார்கள் இப்போது அந்த நிலைமாறி பேசுவதில் பயனில்லை போராடவேண்டும் என்கிறார்கள்.

நாம் ஆயுதம் ஏந்தியது அரசியல் தந்துரோபாயமே எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தலில் பல அணிகளாக பூதங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மணல் கொள்ளையர்கள் கிறீஸ் பூதங்கள் பெண்களை சீரழித்த குழுக்கள் இன்று மக்கள் முன்னிலையில் வாக்குக் கேட்கத் தெடங்கியுள்ளனர்.

எனவே நாம் தாயகத்தில் பாதுகாப்பாக சுதந்திரமாக இருக்க ஒரே வழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சிலவிமர்சனங்கள் இருக்கலாம்ஆனால் அவற்றை இப்போது கதைப்பதற்கான நேரம் அல்ல.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஜனநாயக அரசியல் போராட்டத்தை ஆரம்பிப்பதற்காகவே பல வருங்களுக்கு முன்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கினார்.

ஆயுதப்போராட்டத்தில் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்று எண்ணியதாலும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டமிடல்களை வைத்திருந்தமையினாலேயே பல வருடங்களுக்கு முன்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்போது முன்னாள் போராளிகள் என்ற பெயரில் பல கட்சிகள் உருவாகின்றன. அவ்வாறான கட்சிகளில் இருப்பவர்கள் திராணி இருந்தால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எந்தப் படையணியில் எந்த இலக்கத்துடன் இருந்தார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும்.

எனவே போராளிகளின் பெயரில் உருவாகும் கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.