மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் அமோக ஆதரவுடன் சஜித் வெற்றி

01 1 2
01 1 2

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமோக ஆதரவு உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வாழைச்சேனை கடதாசி ஆலையின் தவிசாளருமான மங்கள செனவிரத்ன தெரிவித்தார்.

ஓட்டமாவடி – 01 பைபர் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக ஐந்து வருடத்திற்கான நியமனம் எனக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை ஒன்றிணைத்து எமது சேவைகள் இடம்பெறும்.

தற்போது இடம்பெறவுள்ள நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுகின்றார். இவர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெறவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, கல்வி நிலைமை உயர்த்தும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெறும் பட்சத்தில் மேலும் பாரிய வேலைத் திட்டங்களை எனது காலத்தில் மேற்கொள்வேன்.

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான காரியாலயம் மிக விரைவில் வாழைச்சேனை துறைமுகத்திற்கு முன்னால் திறந்து வைக்கப்பட்டவுள்ளது. இத்திறப்பு விழாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உட்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார்.

ஓட்டமாவடி – 01 பைபர் தொழிலாளர் சங்க தலைவர் நாகூர்லெப்பை நிஜாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பாளரின் ஊடக இணைப்பாளர் ஏ.எஸ்.சதீக் மற்றும் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பைபர் சங்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், சங்கத்தின் தேவைகள் தொடர்பான மகஜரும் மாவட்ட அமைப்பாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு பைபர் சங்கத்தினர் தொழில் மேற்கொள்ளும் இடங்களை பார்வையிட்டதுடன், விரைவில் மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடி தங்களது பிரச்சனைகளை தீர்த்து தருவதாக வாக்குறுதி வழங்கினார்.