பிரிந்து நிற்பதால், அடுத்த ஐந்து ஆண்டுகளும் ஓரங்கட்டப்படுவோம்

27072977 2103198573246374 96133550792932556 n
27072977 2103198573246374 96133550792932556 n

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பொதுநிலைப்பாடொன்றுக்கு வரச்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இதன் போது கருத்து தெரிவித்திருந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் புவனராஜ்

சிறுபான்மை சமூகமாகிய நாம் அரசியல் ரிதீயாக எவ்விதமான பலமும் அற்றவர்களாகவே உள்ளோம். குறிப்பாக இலங்கைத் தீவு சுதந்திரமடைந்ததாக கூறப்படும் வரலாற்றுக் காலம் முதல் தமிழ் சமூகம் தேசிய இனத்திற்கான அங்கீகாரம் வழங்கப்படாத, உரிமைகள் மறுக்கப்பட்ட இரண்டாம் தர பிரஜைகளாகவே நாம் பார்க்கப்படுவதோடு, அரசியல் தோற்றத்திலிருந்தே, சிங்கள பெருந்தேசியவாத சக்திகள் எம்மை பார்க்கின்ற நிலைமைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற பேரவலம் முதல் எந்தவொரு விடயத்திற்கும் நாம் நீதியைப் பெறவில்லை. எமது அபிலாஷைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு முயற்சிகள் எடுத்தும் பேரினவாத சக்திகளின் சூழ்ச்சிகளால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றோம். தற்போதைய அரசியல் சூழலிலும் பேரம் பேசும் சக்தியை இழந்து, வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டு செயற்படும் அரசியல் தரப்புப்புகளாகத் தமிழ்த் தேசிய சக்திகள் சிதறிக் கிடக்கின்றது. இவ்வாறு சிதறிக் கிடப்பதால் எவ்விதமான பயனுமில்லை . அதேநேரம் தமிழ் மக்களின் உரிமைகளை நெஞ்சில் நிறுத்தி கொள்கைக்காக கருத்தொற்றுமையுடன் ஒன்றுணையும்போதே எமது உரிமைகளை வென்றெடுக்கமுடியும் என்பதையும் தமிழ் தலைமைகள் இந்த நேரத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எமது பலம் என்ன? எமது பலவீனம் என்ன என்பதை நாம் ஆழ்ந்தாராய்ந்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய தருணம் தற்போது எழுந்துள்ளது. நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதற் கட்டமாக தமிழ் மக்கள் தனிப்பெரும் சக்தியை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து தமிழ்த் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டும்.

எமது மக்களின் நீதிக்காவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தினை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் முகமாக அனைத்து தரப்புக்களும் இணைந்து பொதுவான நிபந்தனைகளை வகுத்து ஆட்சியாளர்களிடத்தில் உரிய உறுதிப்பாடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தச்சந்தர்ப்பத்தினை தவற விடும் பட்சத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் மீண்டும் நாம் ஓரங்கப்பட்டு நீதியும், உரிமைகளும் மறுதலிக்கப்பட்ட இனத்தவர்களாகவே இந்த நாட்டில் வாழவேண்டிய நிலைமைக்குள் தள்ளப்படுவோம் என்றார்.