நான் ஜனாதிபதியானால் சரத் பொன்சேகாதான் பாதுகாப்பு அமைச்சர்

1 sajith
1 sajith

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்து நாட்டில் தலைவிரித்தாடுகின்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ சூளுரைத்துள்ளார்.

ஜனாதிபதியாக தாம் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தன்னை எவராலும் கட்டுப்படுத்த முடியாமற் போகும் என்றும் எவருக்கும் அடிபணியும் அரசியல் தான் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கேகாலை – தெரணியகல பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய அவர இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“சில நபர்களுக்கு அடிமையான ஜனாதிபதியாக நான் இருக்கப்போவதில்லை. நான் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் என்னை யாரும் அடிமைப்படுத்தவும் முடியாது.

என்னை கட்டுப்படுத்துவதும் நிர்வகிப்பதும் இதோ இந்த நிலத்தில் காலூன்றி நிற்கின்ற சாதாரண மக்களாகவே இருப்பார்கள். இப்போதும்கூட எமது எதிரணியினர் அனைவரையுமே கட்டுப்படுத்துகின்றார்கள்.

என்னிடமும் சில தவறுகள் நடந்திருக்கலாம். மக்களிடம் வந்து மன்னிப்பு கோருவதற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன். மீண்டும் குடும்ப ஆட்சி இந்த நாட்டிற்கு வேண்டுமா? மீண்டும் இந்த நாட்டிற்கு மன்னராட்சி வேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள்.

எனது தந்தையே இந்த நாட்டு மக்களுக்கு சமுர்தி உட்பட ஜயசவிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். அதே திட்டத்தை நானும் மீண்டும் இந்த நாட்டில் அமுல்படுத்துவேன். ஆனால் இன்று எமது எதிர்தரப்பின் வேட்பாளருக்கு சமுர்தி தெரியாது.

சில நிபுணர்களை அழைத்து சமுர்த்தி என்றால் என்ன என்பதை கேட்டு கற்றுவருவதாக தகவல் கிடைத்தது. அதேபோல பாடசாலை மாணவர்களுக்கு நான் ஜனாதிபதியாகியதும் இரண்டு தடவை சீருடைகளும், மாணவர்களுக்கு நண்பகல் உணவும் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கையை நடத்தத் தேவையாக சிறந்த சம்பள நிர்ணயம் ஒன்றையும் வழங்க நடவடிக்கை எடுப்பேன். நாட்டில் இன்று தலைவிரித்தாடுகின்ற போதைப்பொருள் கடத்தல்கள், வர்த்தகத்தை அழிக்க நடவடிக்கை எடுப்பேன்.

அவர்கள் இன்று அரசியலிலும் கால்பதித்து வர்த்தகத்தை நடத்துகின்றனர். இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமித்து போதைப்பொருள், தீவிரவாதம் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்” என்றார்.