நீராவியடி பிள்ளையாரின் பொங்கல் உற்சவத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என கோரிக்கை !

IMG 2489
IMG 2489

சர்சைக்குரிய  முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த  பொங்கல் விழா நாளை (24) இடம்பெறவுள்ளது. இந்த பொங்கல் விழாவை தேர்தல் காலம் ஆகையால் அரசியல் மயப்படுத்த வேண்டாம் என பிரதேச அரசியல்வாதிகளிடம், ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன்,கொரானா பரவலின் காரணமாக  பொங்கல் விழாவில் சுகாதார நடைமுறையை பேணி, 50 பேர் மாத்திரமே கலந்து கொள்ள, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் அனுமதியளித்துள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்த பொங்கல் நிகழ்வு  தொடர்பில் ஆலய நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நாளை( 24) அதிகாலை 3 மணிக்கு கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி  பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி  மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு, காலை 8.30 மணிக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்று 9.30 மணிக்கு மடை பரவுதல் 10.30 க்கு வளர்ந்து நேருதல் இடம்பெற்று 12.30க்கு பூசை  வழிபாடுகள் இடம்பெறும். என ஆலய  நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து குருகந்த ரஜமகா விகாரை எனும் பெயரில் விகாரை ,புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்ட நிலையில் கடந்த காலங்களில் நீதிமன்றில் இந்த பிணக்கு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தமிழர் திருவிழாவாக பிள்ளையார் ஆலய  பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.