மஹரகமவில் சர்வதேச வர்த்தக மையம்

download 1 8
download 1 8

மஹரகம நகரத்தை சர்வதேச வர்த்தக மையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது மஹரகம நகரம் ஆடைகள் தொடர்பான தொழிற்சாலைக்காக பிரபலமடைந்துள்ளது. இதனால் பிரதேசத்தின் வசதிகளை அதிகரித்து தேசிய, சர்வதேச மக்களுக்கு அவசியமான ஆடைகள் உட்பட ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும் மத்திய நிலையமாக்க வேண்டும். இதன் ஊடாக மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு, தலவத்துகொட பிரதேசத்தில் ​நேற்று(புதன்கிழமை) (22) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 5 வருடங்களில் நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களுடனான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வீட்டுப் பிரச்சினை தீர்த்து தங்களுக்கான வீடுகளை உரிமையாக்கிக் கொள்வதற்காக தனியார் பிரிவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 69 லட்சம் மக்கள் அனுமதி வழங்கிய சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே விடயம் தொடர்பில் வடக்கில் ஒரு கருத்தும், தெற்கில் இன்னொரு கருத்தும் தெரிவிக்கும் சஜித் பிரேமதாஸவின் குணம் தொடர்பில் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது. இவ்வாறான இரட்டை கருத்துக்களை வெளியிடுபவர்கள் நாட்டை பிளவுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் முதன்மை இடத்தில் உள்ளவர்களாகும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட குழுவினர் இணைந்திருந்தனர்.