ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை;ரணில்

AGYI
AGYI

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பரப்புரைக் கூட்டமொன்றில் தன்னால் நிகழ்த்தப்பட்ட உரையின் ஒரு சிறுபகுதி காணொளியை தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி செய்திருக்கும் பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் உள்ளடங்கலாக குறித்தவொரு பிரிவினரால் உருவாக்கப்பட்டதும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதுமான தனியானதொரு கட்சி என்று நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இந்தநிலையில், சிலர் இன்னமும் தம்மை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.  

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதுடன், இந்தத் தீர்ப்பை அவர்கள் எந்த நீதிமன்றத்திற்குச் சென்றாலும் மாற்றியமைக்க முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

சிலர் அரசை விமர்சிப்பதை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியையும் விமர்சிக்கின்றார்கள். எம்மை விமர்சிப்பதென்பது அவர்கள் அரசுக்குச் செய்கின்ற உதவியாகவே அமையும்.  

அதேபோன்று மேலும் சிலர் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்றும், இந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பொதுத்தேர்தலில் போட்டியிடத் தமக்கு அனுமதி கிடைத்திருக்கின்றது என்றும் கூறுகின்றனர்.  

இவ்வாறு கூறுகின்றவர்கள் எமக்கு எதிராக நீதிமன்றத்துக்கும் சென்றார்கள். எனினும், அனைத்து நீதிமன்றங்களும் அவர்களுக்கு ஒரே தீர்ப்பையே வழங்கியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டு, அதன் ஒரு கூட்டிணைவாக ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது” – என்று தெரிவித்துள்ளார்.