சந்திரகுமாரை ஆதரித்த அதிகாரிகள்மீது தமிழ் அரசு கட்சி முறைப்பாடு!

தமிழ் அரசு கட்சி
தமிழ் அரசு கட்சி

கிளிநொச்சியில் மாற்றம் வேண்டும் என குறிப்பிட்டு ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் ஆற்றிய உரை தொடர்பில், இலங்கை தமிழ் அரசு கட்சி, தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

கிளிநொச்சியில் வதியும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஒருவர் அண்மையில், தருமபுரம் பகுதியில் நடந்த ஈபிடிபி கட்சியை சேர்ந்த முருகேசு சந்திரகுமாரின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.

இதன்போது, கிளிநொச்சியின் முக்கிய ஆளுமைகள் பலர்- கல்விச்சமூகத்தை சேர்ந்தவர்கள், வைத்தியர்கள் உள்ளிட்டவர்கள்- மாற்றம் தேவையென்பது குறித்து, ஒரு கலந்துரையாடல் நடத்தினோம் என தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி நகரிலுள்ள மொட்டை மாடியொன்றில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர்கள், தற்போது கடமையிலுள்ள கல்வி அதிகாரிகள், அதிபர்கள், வைத்தியர்கள் ஒன்றுகூடி, அன்று கலந்துரையாடினோம் என தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பிட்ட கிளிநொச்சி பிரமுகர்கள் ஒன்றுகூடியது, முருகேசு சந்திரகுமாரிற்கு ஆதரவாகவே என இலங்கை தமிழ் அரசு கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடமும் முறையிட்டு, அந்த மேடையில் ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் பெயர் குறிப்பிட்ட யாரும் தேர்தல் கடமையில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த அதிகாரிகளை தேர்தல் கடமையில் ஈடுபட வைக்காமலிருக்க, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஆலோசித்து வருவதாக தகவல்.