ஆறு மாவட்டங்களுக்கு டெங்கு நோய் அபாயம்!

virus dengue
virus dengue

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் இருந்ததை விட, இரண்டாவது காலாண்டில் குடம்பிகளின் இனப்பெருக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

கொழும்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட நிறுவனங்களில், 50 வீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உரிய முறையில் அவசியமான நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், குறித்த அபாயமானது மழையுடன் மேலும் அதிகரிக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் தற்போது டெங்கு நோய் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த ஆபத்து நிலைமையானது, தொற்று நோய்க்கு வழிவகுக்காமல் தடுக்க, குறித்த பிரதேசங்களில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – என தெரிவிக்கப்பட்டுள்ளது.