மட்டக்களப்பில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!

IMG 20200731 WA0056 720x450 1

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டள்ளது தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுவன் கேணியில் உள்ள பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார அலுவலகம் மீது நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுரங்களும் பதாகைகளும் எரியூட்டப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடாத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று களுவன்கேணியில் பொதுஜன பெரமுனவின் இரு ஆதரவாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களினால்
நேற்று இரவு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு மரண வீட்டுக்கு சென்றிருந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இருவர் மீது குறித்த மரண வீட்டுக்கு முன்பாக வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர்கள் இருவரும் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் அவர்களை பொதுஜன பெரமுனவின் தலைமை வேட்பாளரும் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் சென்று பார்வையிட்டார்.

ஒரு சுமுகமாக நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான அட்டகாசங்களை நடாத்தியாவது வெற்றிபெறலாம் என இவர்கள் கருதுவதாக பொதுஜன பெரமுனவின் தலைமை வேட்பாளரும் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.