துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த நபர் கைது

1596242609 arrest 2

றிப்பிட்டர் ரக துப்பாக்கியை மறைத்து  வைத்திருந்ததாக   கைதான சந்தேக நபரை 3 நாட்கள்  தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள  சம்மாந்துறை பொலிஸார்  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ஒன்றில் பிரசார நடவடிக்கை ஒன்றிற்காக வந்திருந்த தேசிய காங்கிரஸ் அணியின் வாகனம் ஒன்றில் நேற்று(30) மாலை பாய் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்  றிப்பிட்டர் ரக துப்பாக்கி ஒன்று 6 தோட்டாக்களுடன் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த துப்பாக்கியை குறித்த பிரசார கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார் மீட்டதுடன்  குறித்த துப்பாக்கியை  எடுத்து வந்து குறித்த கட்சிக்கு சொந்தமான வாகனமொன்றில் மறைத்து வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 37 வயதான இறக்காமம் பகுதியை சேர்ந்தவரை  கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை    எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை தடுத்து வைத்து  விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.