வன்னி தேர்தல் தொகுதியில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு

c7ae3aa0 07791511 cdad0134 110e6eea tna 1600x600 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்து பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது.

2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 22 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொண்ட நிலையில் 2010 ஆம் ஆண்டு 14 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தபோதிலும் 2015 ஆம் ஆண்டு 16 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் நல்லாட்சி அரசு காலத்தில் அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்கு மறைமுக ஆதரவளித்ததன் ஊடாக கடும் விமர்சனங்களை சந்தித்திருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்தித்திருந்தது.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களை பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னி தேர்தல் தொகுதியில் 3 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

கடந்த முறை செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வைத்தியகலாநிதி சி. சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் என தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் தேசியப்பட்டியலின் ஊடாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவும் பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக வன்னியில் 5 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் செயற்பட்ட கூட்டமைப்பு இம் முறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோருடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சிவசக்தி ஆனந்தனையும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இருந்து வன்னி வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.

இதன் காரணமாக 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியுற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக வினோ நோகதாரலிங்கம் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வன்னியில் கடும் சவாலாக காணப்பட்ட பொதுஜனபெரமுனவின் முதன்மை வேட்பாளரான கே. கே. மஸ்தானும் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து 40 நாட்களில் தேர்தலை சந்தித்திருந்த மஸ்தான் சுதந்திர  கட்சியில் சிறுபான்மை இனங்களில் வெற்றிபெற்ற ஒரு வேட்பாளராக காணப்பட்டிருந்தார் என்பதுடன் இடையில் எற்பட்ட அரசியல் மாற்றத்தினால் 53 நாட்கள் பிரதி அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினூடாக இம்முறை வன்னியில் களமிறங்கிய ரிசாட் பதியுர்தீன் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். மகிந்த ராஜபக்ச காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சராகவும் நல்லாட்சி காலத்தில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்த ரிசாட் பதியுர்தீன் வில்பத்து காடழிப்பு விவகாரம், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விடயங்கள் தொடர்பில் கடும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில் வன்னியில் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

இதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட கு. திலீபன் வேறு எந்த தேர்தலிலும் போட்டியிடாது நேரடியாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாகாணசபை தேர்தலில் வவுனியாவில் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கத்தின் வெற்றிக்காக செயற்பட்ட கு. திலீபன் பின்னர் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அங்கிருந்து வெளியேறி ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டு வவுனியாவில் மக்கள் ஆதரவின்றி காணப்பட்ட ஈ.பி.டி.பி கட்சியை பல சமூக வேலைத்திட்டங்களின் ஊடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்தமையினால் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.