ஒரே நாளில் இந்தியாவில் 51 ஆயிரத்து 706 பேர் குணமடைவு!

202006100231551682 Where did the corona originate in India Bengaluru SECVPF
202006100231551682 Where did the corona originate in India Bengaluru SECVPF

இந்தியாவில் 51 ஆயிரத்து 706 பேர், கொரோனா பாதித்து பல்வேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு நிம்மதியுடன் திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் நேற்று தொடர்ந்து 7ஆவது நாளாக கொரோனா வைரஸ் தொற்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதித்துள்ளது. ஆனாலும் குணம் அடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதலையும், நம்பிக்கையையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் இந்தியாவில் 51 ஆயிரத்து 706 பேர், கொரோனா பாதித்து பல்வேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு நிம்மதியுடன் திரும்பியுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 12 இலட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக அதிகரித்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுயுள்ளது.

இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து 67.19 சதவீதம் ஆகி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் நாட்டில் கொரோனாவுக்கு 857 பேர் இரையாகி, மொத்த பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் பலி விகிதம் 2.09 சதவீதமாக குறைந்திருக்கிறது என்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. மேலும் நாட்டில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 19 இலட்சத்தை கடந்துள்ளது. ஆனாலும் குணம் அடைந்தோர் எண்ணிக்கையும் 12 இலட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் தற்போது பல்வேறு வைத்தியசாலையில் 6 இலட்சத்து 95 ஆயிரத்து 972 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மதியம், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளிவிவரம், உலகமெங்கும் 1 கோடியே 85 இலட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த தொற்று பாதித்திருப்பதை காட்டியுள்ளது. அதே நேரம், இந்த கொலைகார வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்து விட்டதையும் தெரிவித்துள்ளது.

உலகின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு 49 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தன் பிடியில் வைத்துள்ளது. 1 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றும் உள்ளது.

இரண்டாவது மோசமான பாதிப்பை அடைந்துள்ள நாடாக பிரேசில் தொடர்கிறது. அங்கு 28 இலட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மோசமான பாதிப்பில் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கிறது.