இனப்படுகொலைக்கான நீதியே நிரந்தர தீர்வுக்கும் வழிவகுக்கும்! முள்ளிவாய்க்காலில் விக்னேஸ்வரன் உறுதி

1871d35b 6ba9 4e1d ab30 b8725a7b8f2d
1871d35b 6ba9 4e1d ab30 b8725a7b8f2d

“தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்றால் போரில் இறந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதியின் அடிப்படையில்தான் எமக்கான அரசியல் தீர்வு அமையும். இதை நாம் கைவிட்டால் எங்களுக்கு தீர்வு கிடையாது. இறந்த மக்களின் தியாகங்கள்தான் எமக்கு நல்லதொரு தீர்வைத் தரும்.”

– இப்படி கூறியுள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் அக்கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவானவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான க. வி. விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தை நேற்றைய தினம் தமிழினப் படுகொலையின் குறியீட்டு இடமான முள்ளிவாய்க்கால் மண்ணில் உறுதியேற்று ஆரம்பித்தார்.

அவரின் இந்த உறுதியேற்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உறுதிப் பிரமாணம் முடிவடைந்த பின்னர் விக்னேஸ்வரனிடம் ஊடகங்கள் கேள்விகளை எழுப்பின. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு

முள்ளிவாய்க்கால் எங்கள் விடுதலைப் போராட்டத்தின் சின்னம். இங்குதான் எமக்கு எதிரான இனப்படுகொலை நடந்தது. தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றால் இறந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அந்த நீதியின் அடிப்படையில்தான் எமக்குரிய அரசியல் தீர்வு அமையும். இதை நாம் கைவிட்டோமானால் எங்களுக்கு தீர்வு கிடையாது. இறந்த மக்களின் தியாகங்கள்தான் எமக்கு நல்லதொரு தீர்ப்பைக் கொண்டு வரப்போகிறது.

தற்போதைய அரசாங்கம் எல்லாவிதத்திலும் இராணுவ நிர்வாகத்தைக் கொண்டுவர எத்தனிக்கிறது – கொண்டு வந்து விட்டது என்றும் சொல்லலாம். ஆனால், அதற்காக எங்களின் உரிமை – தாயகம் என்ற எண்ணங்கள் அழிந்து விடாது – தேய்ந்து விடாது.

அது இன்னும் இன்னும் எங்கள் மக்களின் போராட்ட எண்ணத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த மண்ணிலே நடந்தவை பற்றி அரசாங்கம்தான் மனம் வருந்த வேண்டும். அந்த மனவருத்தத்தின் அடிப்படையில் தமிழினத்துக்கு நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் – என்றார்.

மேலும், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினா எழுப்பப்பட்டது.

இராணுவப் பின்னணி கொண்ட ஒருவர் ஜனாதிபதியாக வந்தால்அடுத்தநாளே அவர் ஜனநாயகத்திற்கு திரும்பி விடுவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அந்தப் பின்னணியைக் கொண்டவாறுதான் அவரது நிர்வாகமும் அமையும்.

அதற்கேற்றவாறுதான் அவர் செயற்படுகின்றார். இராணுவ ஆட்சி என்று கூறாமலே அத்தகைய ஆட்சியை ஏற்படுத்துகின்றார். ஹிட்லர்கூட இப்படியாகத்தான் முதலில் பதவிக்கு வந்தார் – அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதன் பின்னர்தான் சர்வாதிகாரியாக மாறினார்.

ஆகவே சர்வாதிகாரத்துக்குரிய சகல தகைமைகளையும் நாம் இவர்களிடத்திலே காண்கிறோம். ஆனால் அதற்காக நாம் பயந்தோ – சளைத்தோ விட்டோம் என்று அர்த்தமில்லை. எங்களுடைய வேலைகளை நாம் செய்து கொண்டே போவோம்.

இதனை உலகறியச் செய்ய வேண்டும். உலகம் இது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் காரணத்தால் எங்களுக்கான தீர்வு கிட்ட வேண்டும் – என்றார்.