தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்க் கூட்டமைப்பினர்தான்! மஹிந்தவுக்கு சம்பந்தன் பதிலடி

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 6

“வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தமிழ் மக்களும் அதனை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச தெரிவித்திருந்தார். அதேபோன்று மஹிந்த அணியிலுள்ள பலரும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையான வடக்கு, கிழக்கைக் கைப்பற்றி விட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாவது:-

“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் தலா மூவர் வீதம் 6 தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும், திருகோணமலையில் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும், மட்டக்களப்பில் 2 தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும், அம்பாறையில் தேசியப்பட்டியல் மூலம் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் நாம் பெற்றுள்ளோம். வடக்கு, கிழக்கிலிருந்து மொத்தமாக 10 தமிழ்ப் பிரதிநிதித்துவத்துடன் நாங்கள் நாடாளுமன்றம் செல்கின்றோம். ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் அதன் பங்காளிக் கட்சிகளும் வடக்கு, கிழக்கில் 11 பிரதிநிதித்துவங்களைப் பெற்றிருந்த போதிலும் அதில் 5 பேர்தான் தமிழ்ப் பிரதிநிதிகள். ஏனையவர்களில் நால்வர் சிங்களவர்கள்; இருவர் முஸ்லிம்கள்.

இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையைத் தாம் கைப்பற்றி விட்டோம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனிமேல் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை எனவும், தமிழ் மக்களின் மனதைத் தாம் வென்று விட்டோம் எனவும் ஆளுந்தரப்பினர் தம்பட்டம் அடிக்கக்கூடாது.

கடந்த முறையைவிட 6 ஆசனங்கள் இம்முறை எமக்குக் குறைந்திருந்தாலும் நாம் பலத்துடன்தான் நாடாளுமன்றம் செல்கின்றோம். அங்கு எதிரணியில் இருக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சேர்த்து தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்போம்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக சர்வதேச சமூகத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையே ஏற்றுள்ளனர். தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலுக்குப் பின்பும் சரி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசப் பிரதிநிதிகள் எம்முடன்தான் தொடர்ந்து பேசிக்கோண்டிருக்கின்றார்கள். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், அரசியல் தீர்வு விடயம் குறித்தும் ராஜபக்ச அரசு எம்முடன் பேசியே ஆக வேண்டும். தீர்வு விடயம் தொடர்பில் பேச்சுக்கள் தொடர்ந்தால் அரசுக்கு எம்மாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.

அரச தரப்பினர் வீரவசனம் பேசிக்கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் நலன் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டால்தான் நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும்” – என்றார்.