ரூ. ஒரு கோடியே 25 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டை, சந்தனக் கடத்தல் முறியடிப்பு

lkjh

சட்டவிரோதமாக கடத்த முயற்சி செய்யப்பட்ட 120 கிலோகிராம் வல்லப்பட்டை மற்றும் 120 கிலோகிராம் சந்தனத்தை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

40 அடி குளிரூட்டப்பட்ட கொள்கலனில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

அழுகிய நிலையில் காணப்பட்ட மரவள்ளிக்கிழங்குகள், பப்பாளி, இளநீர், அன்னாசிப்பழம் உள்ளிட்ட பொருட்களுடன் வைத்து கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளது எனச் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

ஒருகொடவத்தை ஏற்றுமதி வசதி மையத்தில் இணைக்கப்பட்டுள்ள தாவர வகைகளின் தனிமைப்படுத்தல் சேவை அதிகாரிகளின் உதவியுடன் இக்கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கொழும்பு 03, கொள்ளுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவரால் டுபாய்க்கு ஏற்றுமதி செய்வற்காக, இவை தயார் செய்யப்பட்டிருந்தன எனவும், இப்பொருட்களின் மதிப்பு ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தேகநபரான குறித்த ஏற்றுமதியாளர் உள்ளிட்ட மூவர் சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.