மணி நீக்கம் ஏன்? – ‘மணியான’ ஆறு காரணங்கள்

v.manivannan
v.manivannan

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமைக்கான ஆறு காரணங்கள் அடங்கிய கடிதம் மின்னஞ்சல் ஊடாக மணிவண்ணனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின் பெயரால் மணிவண்ணனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு காரணங்களாவன:

  1. எமது அரசியல் இயக்கத்தின் கொள்கை சார் அணுகுமுறைகளை தாங்களும் இணைந்து தீர்மானித்திருந்த நிலையில் அதனைத் தொடர்ச்சியாக சவாலுக்கு உட்படுத்தி வந்தமை.
  2. இதன் அடிப்படையில் 18-04-2020 அன்று எமது அரசியல் இயக்கத்தின் தலைமையுடன் தாங்கள் மேற்கொண்ட சந்திப்பிற்கு அமைவாக – 19-11-2019 ஆம் திகதியன்று உறுப்பினர்கள் முன்னிலையில் எமது அரசியல் இயக்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பாகவும், இயக்கத்தின் கொள்கைகளுக்கெதிராக தாங்கள் மேற்கொண்ட பரப்புரைகள் தொடர்பாகவும் தாங்கள் தவறை ஏற்றுக்கொண்டு, எமது அரசியல் இயக்கத்தின் கட்டுக்கோப்பை பாதுகாக்கும் நிலைப்பாடாக தங்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தாங்களாகவே கேட்டிருந்தீர்கள்.
  3. குறித்த சந்திப்பின்போது – தாங்கள் ஏற்றுக்கொண்ட தவறை எமது அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமாகத் தெரிவித்து இயக்கத்தின் ஒழுக்கத்தையும், கொள்கை நிலைப்பாடுகளையும் வலுப்படுத்துமாறு தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், அதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டிருந்த நிலையிலும், இதுவரை அதற்கான செயற்பாடுகளை தாங்கள் மேற்கொள்ளத் தவறியமை
  4. மத்திய குழு தீர்மானத்தின் அடிப்படையில் – எமது அரசியல் இயக்கத்துக்கு விரோதமாக செயற்படும் திரு கொட்வின் தினேஸ் போன்றவர்களிடமிருந்து – வரப்பிரசாதங்களைப் பெறமுடியாது என மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையிலும், அவரிடமிருந்து பண உதவியினைப் பெற்றிருந்தீர்கள்.
  5. அவ்வாறு பெற்றிருந்த வரப்பிரசாதங்கள் தொடர்பாக – தலைமைக்கு தெரிந்த நிலையில் அப்பணத்தினை மீளளிப்பு செய்யும் நடைமுறையினை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் வலியுறுத்தியபோதும் – அதனை நடைமுறைப்படுத்தாது தலைமையினதும் மத்திய குழுவினதும் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டமை.
  6. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் எமது அரசியல் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் என்னும் பதவி நிலையினை வைத்து – அரசியல் இயக்கத்தின் தீர்மானத்திற்கு எதிராகவும், கொள்கை நிலைப்பாடுகளுக்கு எதிராகவும் உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் செயற்படத் தூண்டியமையும், கட்டுப்படுத்தாமையும், குழுவாதங்களை உருவாக்கி அரசியல் இயக்கத்தின் ஒற்றுமையைக் குலைக்க முயன்றமையும்.
lettertomani
lettertomani