9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

1578042784 Parliament 2

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (20) நடைபெறவுள்ளது.

9 ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இன்று காலை 9.30 மணிக்கு 9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு இடம்பெறுவதுடன் முதற்கட்டமாக சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அனையடுத்து, பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களதும் சத்தியப்பிரமாண பிரகடனம் இடம்பெறவுள்ளது.

இம் முறை பாராளுமன்றத்திற்கு 80 இற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், 9 ஆவது பாராளுமன்றத்தில் 2 தேசிய பட்டியல் உறுப்பினர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் எங்கள் மக்கள் சக்தியின் சார்பிலும் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இதுவரை பெயரிடப்படவில்லை.

இதேவேளை, சுதந்திரத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதித்துவமின்றி பாராளுமன்ற கன்னி அமர்வு நடைபெறுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.