வெற்றி மமதையில் செயற்பட்டால் விபரீதத்தையே எதிர்கொள்வீர்கள்:எம்.பி கோவிந்தன் கருணாகரம்!

unnamed 28 1
unnamed 28 1

“போர் வெற்றி, இந்தத் தேர்தல் வெற்றி மூலம் நீங்கள் கொள்ளும் மமதை சிலவேளை உங்களுக்கு விபரீதத்தை ஏற்படுத்தலாம். ஆணைப் பெண்ணாக்க பெண்ணை ஆணாக்க மட்டுமே முடியாத அத்தனை அதிகாரங்களையும் கொண்டு தனக்கேற்ற வகையில் அரசமைப்பை உருவாக்க தனது நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்ற ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை இக்கணம் நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்.”

  • இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஓர் இளம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தமிழ்த் தேசிய விடுதலை வேட்கை கொண்டவனாக எம் மக்களின் அபிலாஷைகளை ஆயுதப் போராட்டம் மூலம் மட்டும்தான் வென்றிட முடியும் என்ற அக்கால களநிலமையில் ஆயுதம் ஏந்தி எம் மக்கள் விடுதலைக்காகப் போராடிய நான் அந்த ஆயுதப் போராட்டம் கற்றுத்தந்த படிப்பினைகள் காரணமாக அக்கால நிலைகளுக்கிணங்க ஆயத போராட்டத்ததைத் துறந்து தமிழ்த் தேசிய அபிலாஷைகளை ஜனநாயக வழிமுறையில் பெற்றுக்கொள்ளாலாம் என்பதை உணர்ந்து தமிழர் விடுதலை கூட்டணி எனும் அமைப்பின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலுக்குள் உள்நுழைந்து 1989 தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்து அதன் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சிறு இடைவெளியின் பின் மீண்டும் என் உயிரிலும் மேலான மட்டக்களப்பு மாவட்ட மக்களால் ஐயம் திரிபற்ற முறையில் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு இறைவனுக்கும் என் உயிரிலும் மேலான மட்டக்களப்பு தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தவனாய் எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.

எனது உரையினை நான்கு விடயங்களை உள்ளடக்கியதாக ஆற்றலாம் என நினைக்கின்றேன்.

முதலாவதாக பௌத்தம் தொடர்பான இந்த நாட்டில் நிலவும் சரியான புரிந்துணர்வின்மை. இரண்டாவது கலிங்கப் போர் கற்றுத்தந்த பாடங்களை முள்ளிவாய்க்கால் போர் மூலம் கற்றுக்கொள்ள விரும்பாமை. மூன்றாவது அரசியல் தீர்வுக்காக நமக்கு ஏற்பட்ட வாய்ப்புக்களை நாமே புறம்தள்ளியமை அதனால் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் ஏற்பட்ட அவலம். நான்காவதாக இவை கற்றுத்தந்த பாடங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? என்பதுவே எனது உரையின் சாராம்சம் ஆகும்.

நடைபெற்று முடிந்த ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து எமக்கான மக்கள் ஆதரவு
தளம் தடம்புரண்டதாக அல்லது சில சில்லறைகள் எமது மக்கள் ஆதரவைத் தடம்புரள வைத்ததாக மார்தட்டிக்
கூறுவதை ஏற்க முடியாது ஒன்று.

தமிழ்த் தேசிய அரசியலை தமிழ்த் தேசிய மக்கள் உணர்வுகளைத் தெளிவாக புரிந்து கொண்டவன் என்ற வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எமக்கு ஏற்பட்ட ஒரு சறுக்கல், அவ்வளவுதான். அது தமிழ்த் தேசிய அரசியலின் முற்றுப்புள்ளியல்ல. இதை முதலில் நாம் அறிய வேண்டும் என்று கூறியவனாய் எனது உரையின் முதல் பகுதிக்குள் நுழைகின்றேன்.

பௌத்தம் பௌத்தம் என்று உரத்து உரைக்கின்றீர்களே! பௌத்த சித்தாந்தத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். பௌத்த மதத்தை ஸ்தாபித்த கௌதம புத்தனின் பின்னனியை நீங்கள் அனைவரும் மறந்துவிட்டீர்கள். உலகின் ஒரே ஒரு இந்து நாடான நேபாள நாட்டின் இந்து மன்னன் சுத்தோதனுக்கும் அவன் மனைவி மாயாதேவி மகா ராணிக்கும் இரண்டாவது இளவளாக இம்மண்ணில் அவதரித்தவர் சித்தார்த்த இளவரசனாவார். இவர் அடிப்படையில் இந்து மதம் சார்ந்தவர்.

இவரது வாழ்வு அரச சுகபோகங்களைத் துறந்ததாகவே இருந்தது. அரண்மனையை விட்டு ஒரு நாள் வெளியே வந்தபோது வீதியிலே மூப்பு, பிணி, சாக்காடு கண்டு வாழ்வின் அர்த்தம் உணர்ந்து தன் அரச வாழ்வு துறந்து தன் அருமை மனைவி மக்களை துறந்து தன் குடும்பம், தன் மக்கள், தன் மதம், தன் இனம் என்பவற்றை மறந்து உலகுக்கு ஒளியூட்டும் பௌர்ணமி தினம் ஒன்றில் பரிபூரணம் பெற்றவர். இங்கு ஒரு ஒற்றுமையை இனங்காண வேண்டும்.

சித்தாத்த இளவரசன் பிறந்தது ஒரு பௌர்ணமி தினமென்றில், சித்தார்த்த இளவரசன் கௌதம புத்தராக புத்த கயாவில் ஞானம் பெற்றது ஓர் பெனர்ணமி தினமொன்றில், சித்தார்த்த இளவரசன் கௌதம புத்தராக இலங்கையில் காலடி பதித்தது ஒரு பௌர்ணமி தினமொன்றில், சித்தார்த்த இளவரசன் கௌதம புத்தராக வாழ்ந்து பரிநிர்வாணம் அடைந்ததும் பெனர்ணமி தினமொன்றில்தான்.

கௌதம புத்தர் தன்னை கடவுளாக ஒருநாளும் உருவகித்தது இல்லை. தான் உருவாக்கிய பௌத்த நெறியை ஒருமதமாக முன்மொழியவுமில்லை. பௌத்தம் இலங்கைக்கு மட்டுமல்ல சிங்களவருக்கு மட்டுமல்ல
உலகுக்கே ஒளியூட்டும் அர்த்தம் பொதிந்த வாழ்வியல் நெறி. இதை இந்த உயரிய சபையில்
உரத்துக்கூறுவதில் எவ்வித தயக்கமும்மில்லை. கௌதம புத்தர் ஆரம்பத்தில் இந்து மதத்தைச்
சார்ந்தவன் என்ற உண்மை வரலாற்றை மறக்காதீர்கள்.

பௌத்த மதம் சிங்களத்துடன் தொடர்புபட்டது என்று முடிச்சுப் போடாதீர்கள். பௌத்தம் பின்னாளில் மதமாக உருவாகி உலகளாவிய ரீதியில் வியாபித்தது. பௌத்தமும் சிங்களமும் இணைய முன்னரே பௌத்தமும் தமிழும் உலகளாவிய ரீதியில் இணைந்து பிணைந்தது வரலாறு. பௌத்த இலக்கியங்கள் பாளி மொழிக்கு முன்னர் சிங்கள மொழிக்கு முன்னர் தமிழ் மொழியில் ஆக்கப்பட்டமை வரலாறு.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சீவகசிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை என்பன பௌத்த காப்பியங்களே. இவற்றை அடியொட்டியதாகவே சிங்கள காப்பியங்கள் உருவாகின என்பதே மறுக்க முடியாத உண்மை. எனவே, பௌத்தம் இந்து என்பதும் இந்து பௌர்ணமி என்மதும் பௌத்தம் பௌர்ணமி என்பதும் சிங்களம் பௌர்ணமி என்பதும் என்பன ஒரு நேர் கோட்டில் வருபவை என்பது உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா? எனது உரையின் பின் உங்கள் அகக்கண்களை திறந்து நிதானமாக யோசியுங்கள். இந்த நேர்கோட்டுத்தத்துவம் நமக்கிடையான உறவை ஒற்றுமையை, நெருக்கத்தை, பிரிக்க முடியாத பிணைப்பை உங்களுக்கு உணர்த்தும்.

எனது உரையின் இரண்டாவது பகுதிக்கு இப்போது நுழைகின்றேன். எனக்கு இப்போது ஞாபகம் வருகின்றது ராட்சிய விஸ்தரிப்பில் போர் வெறிகொண்டு அலைந்த சாம்ராட் அசோக சக்கரவர்த்தி கலிங்க மண்ணில் நடத்திய கலிங்கப் போர். கலிங்கப் போரானது போர் வெறிகொண்டு அலையும் ஆட்சியாளர்களின் மனதை அஹிம்சையின்பால் திருப்பிய வரலாற்று யுகமாற்றமாகும்.

கலிங்கப் போர் காரணமாக கலிங்க மண்ணில் ஓடிய மனித குருதி வெள்ளம் உயிரிழந்த சடலங்கள் உயிரிழந்த யானை, குதிரை படைகள் அத்தனைக்கும் மத்தியில் போர் வெற்றி இறுமாப்பில் யுத்த களத்தில் உலாவந்த சாம்ராட் அசோக சக்கரவர்த்தி போர்க்கள நிலைமை கண்டு போரின் கொடுமை உணர்ந்து கவலையுற்று மனுக்குலத்தின் பெறுமதி கண்டு தன் ஆதிக்க வெறி கலைந்து புத்தம் சரணம் கச்சாமி என்று போர்க்களத்தில் நின்று உரத்துக் கூறி மறுவாழ்வு பெற்று கௌதம புத்தனின் போதனை உணர்ந்து அரச பதவிக்கு அடுத்துக் காத்திருந்த தன் மக்களை தன் உறவுகளை பௌத்த தூதுவராக உலகின் நாற்திசையும் அனுப்பி பௌத்த தர்மத்தை வியாபிக்கச் செய்தான். அதன் காரணமாகதான் நமது இந்து சமுத்திரத்தின் முத்தான இரத்தினதுவீபம் இலங்கையில் புத்தம் சரணம் கச்சாமி என்ற கோஷமும் முத்தா, முதித்தா, சங்கா என்ற தத்துவவமும் பிரகாசிக்கத் தொடங்கியது.

உலக வரலாற்றைப் புரட்டிய உலக வரலாற்றில் போர் வெறியை அகற்றிய உலக வரலாற்றில் மனுக்குலத்தின் பெறுமதியை உயர்த்திய கலிங்கப் போரை நினைக்கும்போது என் மனக்கண் முன் ஞாபகம் வருவது முள்ளிவாய்க்கால் போரும், அதனூடாக என் தமிழ்த் தேசிய உறவுகள் கண்ட அவலமுமே.

எனது பார்வையில் கலிங்க மண் கண்ட அவலம், துயரம், அழிவு அத்தனையும் என் முள்ளிவாய்க்கால் மண் கண்டது. ஆனால், கலிங்கப் போர் போர் வெறி கொண்ட சாம்ராட் அசோக சக்கரவரத்தியின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை முப்பது வருடகாலம் உள்நாட்டுப் போர் புரிந்து முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரை நடத்தி கலிங்கப் போருக்கு ஒப்பான பேரழிவை எம்மண்ணில் ஏற்படுத்திய உங்களிடத்தில் காணவில்லை என்பதுவே எனது மனக்கவலை.

கலிங்கப் போர் உலகுக்குப் பௌத்தத்தைப் பரப்பியது போல் உலகுக்கு உண்மை ஒளியை உணர்த்தியது போல்
உலகிற்கு சமாதானத்தின் தேவையினை உணர்த்தியது போல் உலகுக்கு ஞானஒளியைப் போதித்தது
போல் முள்ளிவாய்க்கால் அவலம் எதனையும் உங்களிடத்தில் ஏற்படுத்தவில்லை.

முள்ளிவாய்காலில் போர் நிறைவு பெற்ற பின் இன்றைய பிரதமரும் அன்றைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச அவ்வப்போது உள்நாட்டுக்கும், உலவுக்கும் கூறிய செய்திகள் எமக்கு ஒரு சிறு நம்பிக்கை ஒளிகீற்றைத் தந்தது. 13 போதாது 13 இற்கு அப்பால் 13 பிளஸ்தருவேன் என்றார். இந்நாட்டில் சிறுபான்மை. பெரும்பான்மையில்லை; அனைவருமே ஒருமித்த இலங்கையர் என்றார். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பிரதேச வேறுபாடு இல்லை; அனைத்துமே எமது நாடு என்றார். அதுவும் வடக்கு, கிழக்கு என்று எல்லா இடமும் சென்று நம் சுந்தர தமிழை தன் சிங்கள தமிழில் சிறப்பாகச் சொன்னார்.

ஐ.நா. செயளாலர் நாயகமும் வந்தார், அனைத்துலக தலைவர்களும் வந்தார்கள், அண்மைய இந்திய நாட்டின் அரசுத்தலைமையும் வந்தது. அவர்கள் அனைவரிடமும் இதனையே கூறினார். நாடுகளிடையே நடக்கும் ஒப்பந்தங்களில் மட்டுமல்ல சர்வதேச சமவாயங்களில் ஏற்கப்படும் விடயங்கள் மட்டுமல்ல உள்நாட்டிலும் சர்வதேச ரீதியான கலந்துரையாடலிலும் அரச தலைவர் மேற்கொள்ளும் கலந்துரையாடல் ஐயம்திரிபட
ஏற்கத்தக்க விடயமே. அதனால் நடந்தவை அனைத்தையும் நம்பினோம்.

ஆனால், எமது நம்பிக்கை நிறைவேறியதாக நான் நம்பவில்லை. அவர்களும் நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. கலிங்கப் போர் உலகுக்கு ஏற்படுத்திய பௌர்ணமி நிலவு ஒளி போல் முள்ளிவாய்க்கால் போர்
வெற்றி எமது நாட்டில் பௌர்ணமி நிலவு ஒளியைப் பாய்ச்சவில்லை. இது கூட உங்கள் மீது
நான் வாசிக்கும் குற்றப்பத்திரமல்ல. இது எனதும் என் மக்களின் மனக்கவலை மாத்திரமே.

எனது உரையின் மூன்றாவது பகுதிக்கு இப்போது நுழைகின்றேன். அதாவது எமக்கு ஏற்பட்ட வாய்ப்புக்களைத் தவறவிட்டமை தொடர்பாக புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஒருவரின் மேற்கோளோடு இதனை ஆரம்பிப்பது பொருத்தம் என்று எண்ணுகிறேன். ‘வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் வராலாற்றில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை’ என்பதே ஆகும். அது எமக்கும் பொருந்தும் என்பதே எனது
நிலைப்பாடு.

1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற கோஷத்தோடு ஆட்சியைக் கைப்பற்றிய பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்த பின்னர் யதார்த்தம் உணர்ந்து தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுடன் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகத் தீர்வு காணும் நோக்கில் இரு தலைவர்களும் இணைந்து பண்டா – செல்வா ஒப்பந்தத்தை உருவாக்கினர். ஆனால், ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்டு ஒப்பமிடப்பட்டமை காயமுன்னரே பௌத்த பேரினவாதிகளினதும், பௌத்த பிக்குகளினதும் அழுத்தங்களையும், எதிர்ப்புக்களயும் எதிர்கொள்ள முடியாத பண்டாரநாயக்கா இரு தரப்பு இணங்கி ஆக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஒப்பந்த ஒழுக்க விதிக்கு முரணாக ஒருதரப்பாகக் கிழித்தெறிந்தார்.

இத்தனைக்கும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் சமஷ்டிக்கு சமமாகவோ அல்லது இந்திய – இலங்கை ஒப்பந்நத்தின் அழுத்தத்தால் உருவான பதின்மூன்றாவது அரசமைப்பு சீர்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைக்கு ஈடானதானதோ அல்ல. அது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி பிரயோகம் சம்பந்தமான சரத்துக்களையே பெரும்பாலும் உள்ளடக்கியிருந்தது. ஒரு வேளை பண்டா – செல்வா ஒப்பந்தம் அமுலாகி இருந்தால் மூன்று தாசாப்தங்களாக எமது நாட்டில் தமிழ்த் தேசிய விடுதலை என்ற பெயரில் எமது தரப்பாலும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் அரசு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட போர் அதன் மூலம் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள், அரச உடைமைகள் அழிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார அபிவிருத்தியில் சிங்கப்பூரைவிட மிஞ்சியிருக்கலாம் என்பதை நான் இன்றும்
நம்புகின்றேன்.

பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பரிநாம வளர்ச்சியே எமது நாடு எதிர் நோக்கிய உள்நாட்டுப் போர். இது நாட்டின் ஒருமைப்பாட்டை சவாலுக்குட்படுத்தியதன்றி நாட்டின் இன ரீதியான, மதரீ தியான, மொழி ரீதியான முரண்பாட்டைத் தோற்றுவித்தது. இந்த முரண்பாட்டின் முதிர்ச்சி வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்களிடையே ஆயதப் போராட்டத்தைத் தோற்றுவித்ததது.

இந்தப் போராட்டத்தின் விளைவாக கோவிந்தன் கருணாகரம் ஆகிய நான் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினூடாக ஜனா எனும் பெயர் சூடி களமாடி விழுப்புண் பெற்று இறப்பின் தறுவாய்க்குச் சென்று இன்று உங்கள் முன் இந்த உயரிய சபையில் உரையாற்றுகின்றேன். இது மட்டுமல்ல போர் உச்சக்கட்டம் நிலவிய காலத்தில் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் இன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசமைப்பு வரைபு இந்த உயரிய சபையில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இது போன்று பல வட்ட மேசை மகாநாடுகள் சர்வகட்சி கலந்துரையாடல்கள் எனப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு யாவும் கிடப்பில் போடப்பட்டு நம் நாடு போர் இருளில் மூழ்கி சின்னாபின்னம் அடைந்தமை நாட்டின் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களாகும்.

இவையெல்லாம் நாம் தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களே. இதுகூட நான் உங்கள் மீது வாசிக்கும் குற்றப்பத்திரிகை அல்ல. இது எனதும் என் மக்களின் மனக்கவலை மாத்திரமே.

எனது உரையின் இறுதிப்பகுதிக்கு இப்போது நுழைகின்றேன். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு உங்களுக்குப் பெரும் வெற்றி. இதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால், இந்த வெற்றிக்கான காரண காரியங்களை நான் ஆராய முனையவில்லை.

நீங்கள் பெற்ற இந்தப் பெரு வெற்றியை நம் நாட்டில் ஐக்கியம், ஒருமைப்பாடு, இன, ம, மொழி ரீதியான சமத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்பப் பயன்படுத்துங்கள். படைகளின் மனோபாவம், படைத்தளபதிகளின் மனோபாவம், போரின் தர்மம், போரின் அதர்மம் அத்னையும் புரிந்தவன் நான். ஏனென்றால் நானும் முன்னாள் போராளி களமாடியவன். இதனால்தான் கூறுகின்றேன் போர்க் கால சமன்பாடு சமாதான காலத்துக்குப் பொருந்தாது.

போர் வெற்றி, இந்தத் தேர்தல் வெற்றி மூலம் நீங்கள் கொள்ளும் மமதை சிலவேளை உங்களுக்கு விபரீதத்தை ஏற்படுத்தலாம். ஆணைப் பெண்ணாக்க பெண்ணை ஆணாக்க மட்டுமே முடியாத அத்தனை அதிகாரங்களையும் கொண்டு தனக்கேற்ற வகையில் அரசமைப்பை உருவாக்க தனது நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்ற ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை இக்கணம் நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது பிரிக்க முடியாத – பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் ஒன்றாகச் சமத்துவமாக வாழும் உரிமையையே. எமது கோரிக்கையைப் பிழையாக பொருள்கோடல் செய்யாதீர்கள். தென்னிலங்கை மக்களை எமது கோரிக்கை தொடர்பாக பிழையாகத் தவறாக வழிநடத்தாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம். நீங்கள் பெற்ற தேர்தல் வெற்றிக்கும் தேர்ந்தெடுத்த அரசுக்கும் வாழ்த்துக்கள் கூறி விடைபெறுவது முன்னாள் போராளியும் இந்நாள் ஜனநாயகவாதியான ஜனா என அறியப்பட்ட கோவிந்தன் கருணாகரம்” – என்றார்.