பண்டாரவன்னியன் சிலைக்கு படிக்கட்டு அமைத்தமைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு!

lkjhvb

வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்த பகுதியில் 1981 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலைக்கு அருகாமையில் படி அமைக்கப்பட்டமைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். 

இது தொடர்பால் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய வீரனான பண்டாரவன்னியனுக்கு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிவசிதம்பரத்துடன் இணைந்து ஊர் பிரமுகர்கள் மாவட்ட சபை தலைவரும் தற்போதைய ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிரேஸ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் ஆகியோர் சிலை அமைத்திருந்தனர்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அக் காலப்பகுதியில் மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த சிலை நிறுவப்பட்டதுடன் இதுவரை பண்டாரவன்னியன் நினைவுதினமும் அனுஸ்டிக்கப்பட்டு வந்துள்ளது. 

எனினும் தற்போது வவுனியா நகரசபை குறித்த சிலையை பராமரிப்பது என்ற போர்வையில் நினைவு தினத்தில் மாலை போடுவதற்காக படிக்கட்டினை பல இலட்சம் ரூபா செலவில் அமைத்துள்ளது. இப் படிக்கட்டுகள் கம்பீரமாக காணப்பட்ட பண்டாரவன்னியன் சிலையை உரு மறைப்பு செய்யும் வகையிலும் சிலையின் தனித்துவத்தினை அழிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

எவரது ஆலோசனையும் இன்றி தன்னிச்சையாக குறித்த படிக்கட்டுகளை அமைத்தமை தமிழ் மன்னனின் வீரத்தினையும் அவரது சிறப்பினையும் மழுங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந் நிலையில் நாளை 25 ஆம் திகதி பண்டாரவன்னியனின் 217 ஆவது நினைவு தினமும் அனுஸ்டிக்கப்படவுள்ளது. 

IMG 2235