ரஞ்சனுக்கு எதிராக வழக்கு; நாளை மீண்டும் விசாரணை

440518c3e99ac28a2ca20b89783e67af XL
440518c3e99ac28a2ca20b89783e67af XL

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் வாய்மூல சமர்ப்பணம் இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிசிர டி அப்ரு, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வாய்மூல சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்க சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.

இதன்படி, நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்து, நாடாளுமன்றத்தால் உரிய சட்டமொன்று வகுக்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்நீதிமன்றத்துக்கு அல்லது உயர்நீதிமன்றத்தின் நீதிபதியொருவருக்கு நேரடியாக அவமதிப்பை ஏற்படுத்தியிருந்தால் மாத்திரமே, இது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குள்ளான கருத்தில், உயர்நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் குறித்து எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த முறைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, நீதிமன்ற அதிகாரம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தின் மூலம் அப்போதைய நீதியமைச்சரின் செயற்பாடுகள் மாத்திரமே விமர்சிக்கப்பட்டுள்ளதே தவிர,  நீதிபதியை விமர்சிப்பது அவரின் நோக்கமாக இருக்கவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்க மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை எந்தவகையிலும் உறுதிப்படுத்த முடியாது எனவும், இதனால் குறித்த குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தனது வாய்மூல சமர்ப்பணத்தின் நிறைவில் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய தினம் சட்டமா அதிபர் சார்பில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமாந்த, இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது