தூதுவருக்கு எதிராக எல்லாவல மேதானந்த தேரர் போர்க்கொடி

625.500.560.350.160.300.053.800.900.160.90 4 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 4 5

இலங்கையின் உள்வீட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை இந்தியாவுக்குக் கிடையாது. எனவே, அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பை இந்தியத் தூதுவர் உடனடியாக மீளப்பெற வேண்டும்.”என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது நாட்டுப் பிரச்சினைகளில் கருத்துத் தெரிவிப்பதற்கு இந்தியத் தூதுவருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் இந்தியாவின் உள்ளக விடயங்களில் தலையிட்டதில்லை. எனவே, இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் உறவுகளைப் பலப்படுத்துவதே அவரின் பணியாக இருக்க வேண்டும் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கதைப்பதற்கு வாய்ப்புக் கேட்டிருந்தால் அதனை இந்தியத் தூதுவர் நிராகரித்திருக்க வேண்டும். அதேபோல் உள்நாட்டுப் பிரச்சினைகள் இந்தியாவுடன் கதைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எவரும் அதிகாரம் வழங்கவில்லை. எனவே, பிரிவினைவாத ஏமாற்று அரசியலை இனியாவது கூட்டமைப்பு கைவிட வேண்டும்.

தமிழர்களின் விடுதலைக்காகப் போராடுகின்றோம் என மார்தட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. எனவே, அரசுடன் இணைந்து மக்களுக்கான பணியை முன்னெடுக்குமாறு நினைவூட்ட விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்