அரசமைப்பின் 13, 19 திருத்தங்களில் மாற்றம்: சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்!

IMG 20200826 WA0065

“அரசமைப்பின் 13 மற்றும் 19ஆவது திருத்தத்தங்களில் புதிய அரசு மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு திருகோணமலையில் இன்று நடைபெற்றது.

சம்பந்தனின் இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மேற்படி சந்திப்பு தொடர்பில் சம்பந்தன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் என்னுடன் கலந்துரையாடினார். தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் அடைந்த பின்னடைவுக்கான காரணங்கள் தொடர்பில் அவருக்கு நான்  விளக்கங்களை அளித்தேன்.

தேர்தல் பரப்புரைகளின்போது சில தமிழ்க் கட்சிகள், தேசிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்பட்டன. அந்தக் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களுக்குப் பண உதவிகள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கின. அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை அதிக வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் கடந்த காலங்களைப் போல் போதிய ஆசனங்களைக் கூட்டமைப்பால் பெற முடியவில்லை என்பதை அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கிக் கூறினேன்.

அதேவேளை, புதிய அரசால் அரசமைப்பின் 13 மற்றும் 19ஆவது திருத்தங்களை நீக்குவது அல்லது அதில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்த எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்தேன்.

13ஆவது மற்றும் 19ஆவது திருத்தத்தங்களில் புதிய அரசு  மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் என்னவென்பது எங்களுக்குத் தெரியாது என்பதையும் அவரிடம் குறிப்பிட்டேன்.

இந்த விடயம் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

இலங்கையின் நீண்டகால தேசிய பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. முன்னைய அரசு கூட தனக்குள் ஏற்பட்ட பிளவால் தீர்வை முன்வைக்கத் தவறிவிட்டது என்பதையும் தூதுவரிடம் சுட்டிக்காட்டினேன்.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, நோர்வே மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசு பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது.

இந்த நாடுகளின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தோற்கடித்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு முன்வைக்கப்படவில்லை என்பதையும் அமெரிக்கத் தூதுவரிடம் சுட்டிக்காட்டினேன்” – என்றார். 

IMG 20200826 WA0066
DSC 0232
DSC 0228
DSC 0229