எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா தமிழர்கள் இல்லாத செயலணி ;சார்ள்ஸ்

Charles Nirmalanathan 700x380 1
Charles Nirmalanathan 700x380 1

தமிழர்களுடைய வரலாறு, கலாசார அடையாளங்கள் என்பன அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா தமிழர்கள் இல்லாத  கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணி அமைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இடம்பெற்று வரும் விவாதத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டது.

12 பேர் அங்கம் வகிக்கும் அந்த செயலணியில் தமிழர் ஒருவர்கூட உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து, அதற்கு தமிழர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், குறித்த செயலணியில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், அந்த செயலணியின் உறுப்பினர்களாக மேலும் நால்வர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களிலும் தமிழர்கள் ஒருவர்கூட உள்வாங்கப்படவில்லை. கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணியில் தமிழர் ஒருவர்கூட ஏன் நியமிக்கவில்லை என நான் ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகிறேன்.

கிழக்கு மாகாணத்தின் மரபுரிமைகளை பாதுகாக்க பௌத்த மதகுருமார் அடங்கிய செயலணி உருவாக்கப்பட்டது, தமிழர்களுடைய வரலாறு, கலாசார அடையாளங்கள் என்பன அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா என கேட்க விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்