விக்கியின் உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படாது என சபாநாயகா் அறிவிப்பு

sri lanka
sri lanka

நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடா்பில் நாடாளுமன்றில் இன்றும் காரசார விவாதம் இடம்பெற்றது.

எனினும், விக்னேஸ்வரனின் உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படாது என சபாநாயகா் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் முதல் அமர்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்றும், இலங்கையின் முதல் பழங்குடி மக்களின் முதல் மொழி என்றும் கூறியிருந்தார்.

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் விக்னேஸ்வரனின் இந்தப் பேச்சு பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். அன்றைய தினம் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் விக்னேஸ்வரனின் உரைக்கு எதிராகக் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விக்னேஸ்வரன் உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படாதது குறித்து மனுஷ நாணயக்கார எம்.பி. கேள்வி எழுப்பினார். இதையடுத்து விக்னேஸ்வரனின் உரை தொடர்வில் சபையில் காரசார விவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, அனைத்து எம்.பிக்களுக்கும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை உண்டு எனத் தெரிவித்தார். ஆனால், விக்னேஸ்வரனின் உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படாது என அவர் அறிவித்தார்.