தமிழ் மொழியை இழிவுபடுத்த யாரும் முனைய வேண்டாம்;செல்வம் அடைக்கலநாதன்

SELVAM
SELVAM

தமிழ் மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் எனவும் தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றின் முதலாவது சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழி தொடர்பாக முன்வைத்த கருத்துக்கு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், “சி.வி.விக்னேஸ்வரன் ஐயா, சபை அமர்வில் தன்னுடைய உரையிலே தமிழ் மொழி முதன்மையானது என்று கூறியபோது இங்கு பல எதிர்ப்புக்கள் எதிர்க்கட்சியில் இருந்து உருவானது உண்மையிலே கவலை தருகின்றது. எங்களுடைய மக்கள் நம்பிக்கையோடு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருந்தார்கள்.

என்னுடைய உரிமை தமிழ், என்னுடைய இந்த மண்ணை காப்பாற்றுவதற்கான செயற்பாட்டினை யாருமே தடுக்க முடியாது. என்னுடைய தமிழ் செம்மொழியாக்கப்பட்டுள்ளது. முதன்மை மொழி என்று சொல்வதிலே எனக்கு பெருமை இருக்கிறது. அந்த வகையிலேதான் சி.வி.விக்னேஸ்வரனும் தன்னுடைய கருத்தை சொல்லியிருந்தார்.

சிங்கள மொழி எப்படி உங்களுக்கு பெறுமதியாக இருக்கிறதோ, அதேபோல் எங்களுக்கும் தமிழ் மொழி முதல்மொழி என்று சொல்வதில் பெருமை கொள்வதோடு இறுமாப்பும் கொள்கிறோம்.

இந்த விடயங்களுக்கு நாங்கள் எத்தனையோ விலையைக் கொடுத்திருக்கிறோம். எத்தனையோ உடைமைகளை இழந்திருக்கிறோம். இந்த மண்ணுக்கும் இந்த மொழிக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்ததன் அடிப்படையிலேதான் இந்த இனப் பிரச்சினை எழுந்தது.

அந்த வகையிலே யாரும் எங்களுடைய மொழியை கொச்சைப்படுத்த வேண்டாம். ஏனென்றால் அதற்காக பெரும் விலை கொடுத்துள்ளோம். அதற்காக இன்னும் விலை கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம் என்பதை தெரிவிக்கின்றேன்.

எனவே, எங்களுடைய மொழி சம்பந்தமாக யாருமே அதை இழிவுபடுத்திப் பேசுவதற்கு முனைய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

ஆளும் கட்சியில்கூட இது பற்றி பேசப்படவில்லை. எதிர்க்கட்சியிலே எங்களுடைய மக்கள் வாக்களித்து அவருடைய கௌரவத்தை காப்பாற்றிய நிலையில் அங்கிருந்து இவ்வாறு கருத்துக்கள் வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.