அரசியலமைப்பின் படி பௌத்த மதத்திற்கு முன்னுரிமை: நீதி அமைச்சர்!

13244131 10206583564573853 7588665577616289319 o 800x445 1
13244131 10206583564573853 7588665577616289319 o 800x445 1

பாராளுமன்றம் தெரிவான சகல எம்.பிகளும் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் நாட்டை துண்டாட வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்குவதில்லை எனவும் உறுதியளித்திருக்கின்றனர். இது பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது செயலிலும் காட்டவேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் ஆரம்பமாக நன்றி தெரிவிக்கிறேன். இலங்கையர் என்ற வகையில்  அனைவரையும் ஒன்றிணைத்த நாடொன்றை உருவாக்க வேண்டும். அதற்காக நான் ஆரம்பம் முதல் குரல்கொடுத்து வருகிறேன். இனவாதத்தை புறக்கணித்து தேசியத்துவத்தை போதிக்க வேண்டும். அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

பாராளுமன்றம் தெரிவான சகல எம்.பி.களும் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் நாட்டை துண்டாட ஆதரவுவழங்குவதில்லை எனவும் உறுதியளிக்கின்றனர். இதனை  பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது செயலிலும் காட்டவேண்டும். 

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சவால் விடவோ எதிர்க்கவோ அவசியமில்லை. சகலருக்கும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்குள்ள உரிமையும் யாப்பில் கூறப்பட்டுள்ளது. இனம், மதம், குலம் பேதம் பார்த்து எவரையும் தாழ்வாகவோ உயர்வாகவோ கருதக் கூடாது எனவும் அரசியலமைப்பு கூறுகிறது.

எனவே இந்த நாட்டில் சகல இனத்தவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரம் இருக்கின்றது. சகலரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அதனால் நாட்டுக்கு எது உகந்தது என சிந்தித்து தலைவர்கள் செயற்பட வேண்டும். சரியான பாதையை பார்த்து நாட்டுக்கு தலைமை வழங்க வேண்டும். அதன் மூலமே சகல மக்களும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழும் நிலை ஏற்படும். எமக்கிடையில் விரிசல் தேவையில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்ப கைகோர்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.