சூடேற்றும் வசனம் பேசிய தமிழ் தலைமைகள் வன்னிமக்களை நடுத்தெருவில் விட்டுள்ளனர்

4 4

சூடேற்றும் வசனம் பேசிய தமிழ் தலைமைகள் வன்னியில் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார். 
நேற்று (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தில் அவர் தனது கன்னியுரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

வன்னியில் இதுவரை காலமும் பல பிரச்சனைகள் தீரா பிரச்சனைகளாகவே இருந்து வருகின்றது.  உரிமை உரிமை என்று சூடேற்றும் பேச்சுக்களை மட்டுமே கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் சிலர் வழங்கியுள்ளனர். அப்படி வழங்கியவர்கள் மக்கள் நலனில் அக்கறையின்றி தமது சுகபோக வாழ்க்கை வாழ்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

சர்வதேசம் சர்வதேசம் என்று சர்வதேசத்திற்காக பேசுகிறார்கள் அல்லது எதை பேசினால் பத்திரிகையின் முன்பக்கதில் வரலாம் என்று விளம்பரத்திற்காக பேசுகிறார்கள்.  ஆனால் தமக்கு வாக்களித்த மக்களை நடுத் தெருவில் விட வழி செய்கிறார்கள்.  மக்களுக்கு என்ன தேவையோ அதை தாங்கள் பெற்றுக் கொள்கிறார்கள் அனுபவிக்கிறார்கள்.

இன்று வன்னி மண் வளமற்று வறண்ட தேசமாக காட்சியளிக்கிறது.  அன்று மகிந்த ராஜபக்சவும், டக்ளஸ் தேவானந்தாவும் பயணித்த காலத்தில் எமது வடமாகாணம் கல்வியில் முதன்மையாக இருந்தது.  ஆனால் தற்போது வடமாகாணம் கல்வி தரத்தில் பின்னோக்கி சென்றுள்ளது.

எனவே இவ் உயரிய சபையில் என்னால் முன்வைக்கும் விடயங்கள்: வன்னியில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கி, பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு, புதிய கட்டிடத் தொகுதிகள் கட்டப்படவேண்டும்.கடந்த ஆட்சியில் வீட்டுத்திட்டம் என்கிற பெயரில் மக்களை கடனாளியாக்கியதுபோல் இல்லாமல், இவ் ஆட்சியில் வீடற்ற அனைத்து மக்களுக்கும் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கப்படவேண்டும்.

உடைந்த வீடுகள், கிணறுகள், மலசலகூடங்கள் என்பன புனரமைப்பு செய்யப்படவேண்டும். எமது  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  உருவாக்கிய குடியேற்றங்களைத் தவிர, இன்றுவரை வேறு எந்த குடியேற்றங்களும் முறையாக செய்யப்படவில்லை.  எனவே, உப குடும்பங்களுக்கும், காணியற்றவர்களுக்கும் வீட்டுத்திட்டத்துடன் காணிகள் வழங்கி அடிப்படை வசதியுடன் குடியேற்றங்கள் செய்யப்படவேண்டும்.

கம்பெரலிய என்கிற திட்டத்தில் மழைக்கு காணாமல் போகும் வீதிகள் போல் இல்லாமல் வடக்கின் வசந்தத்தில் வழங்கப்பட்ட தரமான வீதிகள் மீண்டும் எம் மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.
முன்னுரிமையாக வன்னியில் உள்ள அரச திணைக்களங்களில் வேலைவாய்ப்பு வெற்றிடம் பல உள்ளன.

அவற்றுக்கு வன்னியை சேர்ந்த, தகுதி வாய்ந்த ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர் யுவதிகளை உள்வாங்கி அவ் வெற்றிடம் நிரப்பப் படவேண்டும். பிரதேச வைத்தியசாலைகளில் மருத்துவர், தாதியர் பற்றாக்குறையை காரணம் காட்டி மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் வழங்கப்படுவது மிகக் குறைவாக உள்ளது.

உதாரணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள இரணை இலுப்பைக்குளம் வைத்தியசாலை தொடர்ந்து இரண்டு வருடங்களாக நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படாமல் கிழமையில் ஒருநாள் மட்டுமே வைத்திய சேவை வழங்கப்படும் நிலை உள்ளது. இவ்வாறு வன்னியில் பல்வேறு வைத்தியசாலைகள் உள்ளது. இது உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும். அத்தோடு வன்னியில் பிரதேச வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படவேண்டும்.

வன்னியில் திறமையான பல விளையாட்டு வீரர்கள் இருந்தும், அவர்களின் திறமைக்கேற்ற வளங்கள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி, பலர் விளையாட்டுத் துறையை விட்டு ஒதுங்குகின்ற நிலமை உள்ளது. சமீபத்தில், பாக்கிஸ்தானில் கிக் பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு கிடைத்து மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தோடு நாடு திரும்பினர்.

எமது பிரதேசங்கள் அதிகளவு கிரிக்கெட் வீரர்களைக் கொண்டிருந்தாலும் மாவட்டம் தோறும் சீரான ஒரு மைதானம் இல்லாமையான நிலை உள்ளது. எனவே இவ் வீரர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட வேண்டும்.

வன இலாகாவால் வயல் நிலங்களுக்குள் எல்லைக் கற்கள் இடப்பட்டுள்ளது. இவற்றை நீக்கி அக்காணிகளை மக்களுக்கு ஒப்படைத்து வருகின்ற போகம் செய்வதற்கு வழி செய்ய வேண்டும். வவுனியாவில் 140ற்கு மேற்பட்ட குளங்கள் வன இலாகாவினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றை விடுவித்து புனரமைப்பு செய்யப்படவேண்டும். மற்றும் நீண்ட காலமாக காணி உரிமைப் பத்திரங்கள் கிடைக்காத எம் மக்களுக்கு, காணி உரிமைப் பத்திரம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மக்கள் மனங்களை வென்ற இவ் புதிய அரசாங்கம் முதற்கட்ட எனது கோரிக்கைகளை ஏற்று விரைவில் அவற்றை நிவர்த்தி செய்து தருமென்ற நம்பிக்கை எனக்குள்ளது. 

அத்துடன் இன்று நான் இவ் ஆசனத்தில் அமர்வதற்கு காரணமான எனது செயலாளர் நாயகம் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், சக தோழர்களுக்கும் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த அனைத்து உறவுகளுக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.