பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதி என்னவானது?-அனுரகுமார!

Anura
Anura

மார்ச் மாதம் முதலாம் திகதி தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய்க் கொடுப்பனவு வழங்கப்படும் என சபையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதி என்னவானது, ஏன் இம்முறை இடைக்கால கணக்கறிக்கையில் அதற்கான எந்தவித வேலைத்திட்டமும் உள்வாங்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

தோட்டத்தொழிலாளர்களின் கொடுப்பனவு பிரச்சினை எழுந்த வேளையில் பெப்ரவரி மாதத்தில் இது குறித்து பிரதமரிடம் நான் கேள்வி எழுப்பினேன்.

இதன்போது மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் பாராளுமன்றத்தில் வாக்குறுதி வழங்கினார்.

கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் தோட்ட கம்பனிகளுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதா என நான் கேள்வி எழுப்பிய வேளையில் அப்போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான ரொமேஷ் பதிரன, “இன்னும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, விரைவில் தீர்மானம் ஒன்று எட்டப்படும்’ என கூறி மேலதிக காரணிகளை கூற முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் குறிக்கிட்டு என்னிடம் கூறியது என்னவென்றால் “கூறுவது நான், கண்டிப்பாக 1000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கும்” என்றார்.

எங்கே அந்த கொடுப்பனவு, இப்போது முன்வைக்கப்பட்டுள்ள கணக்கறிக்கையில் எங்கே தோட்டத்தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு கணக்குவழக்கு, இதில் ஏன் அவை உள்வாங்கப்படவில்லை என சபையில் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.