ஆனைவிழுந்தான் ரெம்சா ஈரவலயம் தொடர்பிலான கள ஆய்வு ஆரம்பம்

Puttalam Anaivilunthan Sanctuary
Puttalam Anaivilunthan Sanctuary

ஆனைவிழுந்தான் ரெம்சா ஈரவலய சரணாலயத்தின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக துப்பரவு செய்தமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு கள ஆய்வினை ஆரம்பித்துள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சி.பி. ரத்னாயக்கவினால் நேற்று குழுவொன்று நியமிக்கப்பட்டதாக குறித்த குழுவின் தலைவர், அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு சம்பவம் மீள நிகழாதிருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தமது பரிந்துரைகள் மூலம் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனைவிழுந்தான் ரெம்சா ஈரவலய சரணாலயத்தின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக துப்பரவு செய்தமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை 2 வாரங்களுக்குள் வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் சி.பி ரத்னாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் பிரகாரம் எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆனைவிழுந்தான் ரெம்சா ஈரவலய சரணாலயத்தின் ஒரு பகுதியை டோசரைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக துப்பரவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான இறால் வர்த்தகரும் டோசர் சாரதியும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

டோசர் இயந்திரத்தை பொலிஸார் நேற்று முன்தினம் கைப்பற்றியதுடன் அதன் சாரதியையும் கைது செய்தனர்.