மக்கள் அபிவிருத்தியை நோக்கி நகர்கின்றனர்;ஈரோஸ்

unnamed 5 3
unnamed 5 3

தமிழ்மக்கள் அபிவிருத்தியை நோக்கி நகர்வதை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் புலப்படுத்துவதாக ஈழவர் ஜனநாயக முண்ணனியின் உபதலைவரும், பிரதேசசபை உறுப்பினருமான வி.சசிதரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற கட்சியின் நிர்வாக குழுகூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஈரோசின் வவுனியா மாவட்ட நிர்வாக குழுக்கூட்டத்தினை இன்று கூட்டியிருந்தோம்.வவுனியா மாவட்டத்தில் நிர்வாக ரீதியில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கட்சியை முன்னகர்த்தி செல்வதற்கு தீர்மானித்துள்ளோம். கடந்த தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயககட்சியுடன் கைகோர்த்து ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கு சிறிய பங்களிப்பை வழங்கியிருந்தோம்.

அதுபோல எதிர்வரும் மாகாணசபை தேர்லிலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அது தொடர்பான ஏனைய பேச்சுவார்த்தைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் வன்னியில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி அரசியல் நீரோட்டத்தில் இணைத்து கொள்வதற்கான பணியை நாம் முன்னெடுத்துள்ளோம். இறுதிப்போரில் கடுமையான பாதிப்புகளை வன்னிமாவட்டம் சந்தித்திருந்தது. இங்கு பலதேவைகள் இருக்கின்றது.வீட்டுதிட்டம், வீதிகள் தேவையாகவுள்ளது.

அத்துடன் வனவளபிரிவினரால் மக்களின் காணிகள் அபகரிப்பப்பட்டுள்ளன. பழமை வாய்ந்த குளங்கள் திருத்தப்படவேண்டிய தேவை இருக்கின்றது. 
இவற்றை மேற்கொள்வதற்காவே அரசுடன் நேரடி தொடர்பினை கொண்டுள்ள கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். 

பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அரசாங்கத்திடம் எதிர்ப்பினை காட்டி நாம் எதனையும் பெறமுடியாது. அவர்களுடன் பேரம் பேசியே எதனையும் பெற்றுக்கொள்ள முடியும்.அதற்கான சக்தி டக்ளஸ் தேவானந்தாவிடம் இருக்கின்றது. அதனாலேயே அவருடன் கைகோர்த்துள்ளோம்.

கடந்த தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளனர் அபிவிருத்தி மற்றும் அரசியல் தீர்வுகளை மையப்படுத்தி அவர்கள் வாக்கினை செலுத்தியுள்ளனர். யாழிலும் அவ்வாறான ஒரு நிலமை காணப்பட்டிருந்தது. எனவே மக்கள் அபிவிருத்தியை நோக்கி நகர்வதை இந்த தேர்தலின் மூலம் உணர்த்தியுள்ளனர். தற்போது ஒருவேளை உணவிற்குகூட வழியில்லாமல் கிராம புறங்களில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இளைஞர்கள் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றார்கள்.எனவே எமது கிராமங்களில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும்.
காணாமல்போனவர்களின் சார்பாக எமது குரல் நிச்சயமாக ஒலிக்கும். இது தொடர்பாக அந்தமக்களால் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பலபோராட்டங்களில் நாம் பங்குகொண்டிருக்கின்றோம் தொடர்ந்து பங்குபெறுவோம் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளராக வி.அரவிந்தனும், இளைஞரணி தலைவராக ந.மயூரன், மகளீர் அணித்தலைவி தி.பவித்ரா, பொருளாளர் வி.யசோதரன், ஊடக இணைப்பாளர் றோன் கனிசியஸ், ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

unnamed 4 5
unnamed 3 7