தீர்வும் கிடைக்காத பட்சத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என கோரியுள்ளோம்: அமலநாயகி!

IMG 4815
IMG 4815

காணாமல் போன எனது கணவனை சாதாரண பெண்ணாக தேடி எனக்கு மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சிப்பதாக என் மீது அரசு முத்திரைகுத்தி நீதிமன்ற தடை உத்தரவு வழங்கியுள்ளது. அடுத்த கட்டம் நாங்கள் இருப்போம் என தெரியாது எனவே காலம் கடத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு சென்று எங்களுக்கு நீதிதர வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

நாங்கள் எங்கள் உறவுகளையும் நான் எனது கணவரையும் தொலைத்துவிட்டு கடந்த 11 வருடங்களாக தேடிவருகின்றேன் அந்தவகையில் பல வகையில் தேடுதல் மேற்கொண்டு முடியாத நிலையில் நாங்கள் வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களில் சேர்ந்து ஒரு ஒருங்கிணைந்த எங்களுடைய உறவுகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றோம்.

இந்தவகையில் 3 வருடங்களாக தொடர் கவனயீர்பு போராட்டங்களை நடாத்தி எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என நாங்கள் தேடிவருகின்றோம். அந்த வகையில் இலங்கை அரசால் எந்தவொரு தீர்வும் கிடைக்காத பட்சத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என கோரியுள்ளோம்.

இவ்வாறு பல போராட்டங்களை நடாத்தி எங்களுக்கு ஒரு தீர்வு இல்லாமல் உயிர் அச்சுறுத்தல் பல விடுக்கப்பட்டு எமது போராட்டத்தை நிறுத்துவதற்கும் உறவுகளை தேடும் பயணத்தையும் நிறுத்துவதற்காக அரசு தரப்பால் பாரிய அழுத்தங்களை கொடுத்து வந்தனர்.

கடந்த மாதம் 27 ம் திகதி செங்கலடியில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்தோம் அது தொடர்பாக பொலிசாருக்கும் அறிவித்திருந்தோம். அதன் பின்னர் இந்த நிலையில் இந்த போராட்டம் நடாத்துவதால் கொரோன தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக காரணம் காட்டி போராட்டத்தை தடை செய்ய நீதவான் உத்தரவிடப்பட்ட உத்தரவு ஒன்றை பொலிசார் எனக்கு தந்திருந்தனர்.

அந்த நேரத்தில் காணாமல் போன எங்கள் உறவுகளை தேடும் அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது அவ்வாறே இன்று ஞாயிற்றுக்கிழமை 30 திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை அனுஷடிப்பதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மட்டக்களப்பு கல்லடியில் இருந்து காந்தி பூங்காவரையில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்த இருந்தோம்.

இந்த போராட்டம் தொடர்பாக ஒரு கிழமைக்கு முன்னர் பொது சுகாதார அதிகாரிகளிடம் அனுமதியை பெற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம் அப்போது பொலிசார் போராட்டத்தை நடாத்த அனுமதியளித்தனர். இதன் பின்னார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தேன்.

இந்த நிலையில் எனது வீட்டிற்கு நேற்று 29 சனிக்கிழமை வந்து பொலிசார் நீதிமன்ற உத்தரவு ஒன்றை தந்தனர் இதில் நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க ஏதுவாக இருப்பதாகவும் கொரோனா தொற்று நோய் ஏற்பட எதுவாக இருப்பதாக தெரிவித்து நீதிமன்றில் இந்த போராட்டம் நடாத்த தடை விதித்து உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளனர்.

தலைவி என்பது ஒரு கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்டது நான் ஒரு சாதாரண தாயாக கணவனை தொலைத்துவிட்டு தேடுகின்றேன். அரசும் பாது காப்பு படையும் இவ்வாறான ஒரு வேலையை செய்ததையிட்டு கவலையடைகின்றேன்.

நான் என்ன பயங்கரவாதியா ஆயுதம் ஏந்தியா போராடினனான் என்னுயை கணவனை கேட்கின்ற உரிமை எனக்கு இருக்கின்றது நான் ஆயுதம் ஏந்தி போராடவில்லை என்னை வீட்டில் முடக்கி வைப்பதற்கு இவர்கள் யார் தனி மனிதனை காணாமல் ஆக்குவது எந்த சட்டத்தில் இருக்கின்றது

கிழக்கு மாகாணத்தில் எதிர் காலத்தில் போராட்டங்களை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் இந்த நாட்டில் பிறந்த எங்களுக்கு எனது கணவருக்காக குரல் கொடுக்க முடியாத நிலை எனவே இலங்கை அரசு எங்களுக்கு நீதி கிடைக்காதது என்பதால் சர்வதேசத்தை நோக்கி நிற்கின்றோம்

சர்வதேச நாடுகள் உடனடியாக ஜெனீவாவில் இருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு சென்று எங்களுக்கு இனியாவது காலம் கடத்தாமல் தீர்வை பெற்றுதர முன்வரவேண்டும்.

கொல்லப்பட்டதாயின் ஏன் கொல்லப்பட்டது அதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும் இதற்கு பதில் தரவேண்டிய அரசே எங்களை அடக்குமுறைக்குள் ஒடுக்கி கொண்டிருக்கின்றனர்

இது ஜனநாயக நாடு என்று சொல்லுகின்றனர் இந்த அரசில் இருந்து எதையும் பெறமுடியாது இது ஒரு படிப்பினையாக இருக்கும் சாதாரண பெண் ஆன எனக்கு இரண்டு தடைவை நீதிமன்ற உத்தரவு தந்துள்ளனர். எங்களது உணர்வுகள் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது எங்களுடைய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றது 72 தாய்மார்களுடன் நாங்களும் அழிந்து போகப்போகின்றோம். இது ஒரு இனழிப்பாகத்தான் நான் பார்க்கின்றேன்.

இந்த நாட்டில் இருந்து எதுவும் கேட்கமுடியாத நிலை ஒரு அமலநாயகியை இன்று தடுக்கலாம் எனது கணவனை துலைத்து விட்டுதான் நான் இன்று தேடிக் கொண்டிருக்கின்றேன் ஆனால் ஆயிரக் கணக்காண தாய்மார் தமது கணவரையும் சிறுவர்கள் தனது தந்தையையும் தொலைத்துவிட்டு தேடுகின்றனர் அவர்களை தடுக்க முடியமா ?

எனது கணவரை கொடுத்து விட்டு எனது வாழ்கையை இழந்து இன்று நான் வீட்டில் இருந்து குமறிக் கொண்டிருக்கின்றேன் அதற்கான நீதியை கேட்டு நிற்கின்றேன் இன்று ஒரு அமலநாயகியை முடக்கலாம் ஆனால் ஆயிரம் அமலநாயகி உருவாகும் எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை

இலங்கை அரசு எங்களுக்கு தீர்வை தந்திருக்கவேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என பொறுப்பு கூறியிருக்க வேண்டும் அதனை கூற தவறியதனால் நாங்கள் சர்வதேச விசாரணையை கோரிநிற்கின்றோம் சர்வதேசம் கண்திறந்து பார்க்க வேண்டும் என்றார்.