சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி

42

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் தற்போது அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அவர்கள் எந்தவிதமான அபராதம் அல்லது கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இலங்கை பணியாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இது தற்காலிக விசேட சலுகை மட்டுமே எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி வரும் இலங்கை பணியாளர்களுக்கு அரசாங்கம் குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சிறந்த முறையில் இருப்பதனால் இந்த நடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் சவுதி அரேபியாவினால் இலங்கை பணியாளர்களுக்கு வழங்கிய சலுகைகள் மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.