மன்னார் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 403 பேர் வாக்களிக்கத் தகுதி

mannar 5 720x450
mannar 5 720x450

ஜனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்,தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோகன்ராஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலுக்காக மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

8 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மாவட்டச் செயலகத்தில் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

தொலைபேசியூடாக முறைப்பாடுகளை தெரிவிக்க விரும்புபவர்கள் 023-2223713 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும். முதலில் தபால் மூல வாக்களிப்பு இடம் பெறும். தபால் வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகும்.

31 ஆம் திகதி மற்றும் முதலாம் திகதிகளில் படையினருக்கான வாக்களிப்பு இடம் பெறும். 4ஆம் 5ஆம் திகதிகளில் மாவட்டச் செயலக,பொலிஸ் திணைக்கள மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் வாக்களிக்க முடியும்.

தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்காதவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி மன்னார் தேர்தல் திணைக்களத்தில் வாக்களிக்க முடியும். தேர்தலுக்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 1365 அரச அலுவலகர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என அவர் தெரிவித்தார்.