ரிஷாத்துக்கு இன்றும் அழைப்பு

rishad
rishad

முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுமான ரிஷாத் பதியுதீன் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம், ஆகியோர்,  உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21  ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் நேற்று வாக்கு மூலம் அளித்தனர்.

ஆணைக் குழுவினினால் அனுப்பட்டிருந்த  அறிவித்தல் பிரகாரம் அவ்விருவரும்  நேற்று முற்பகல் 9.15 மணியளவில் அங்கு ஆஜராகியிருந்த நிலையில் நீண்ட வாக்கு மூலங்கள் அவர்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன,

முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சரான  எம்.எச்.ஏ ஹலீமிடம் சுமார் ஐந்தரை மணி நேரமும்  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சுமார்  9 மணி நேரமும்  இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21  ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அதன்படி எம்.எச்.ஏ. ஹலீமிடம் பி.ப.2.30 மணியளவிலும், ரிஷாத் பதியுதீனிடம் மாலை 6.15  மணியளவிலும்  நேற்றைய வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய  நேற்று முற்பகல் வேளையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள ஆணைக் குழுவுக்கு சென்ற இவ்விருவரிடமும் இவ்வாறு  வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக குறித்த ஆணைக் குழு தெரிவித்தது.

எவ்வாறாயினும் இன்றைய தினம் மீளவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல் தொடர்பில் பல தரப்பினரால் வழங்கப்பட்ட சாட்சியங்கள் குறித்து இவ்விருவரிடமும்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக  ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.

.