தலைமுறைகள் மாறப்போகிறது ஆனால் நிரந்தர தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை -அங்கஜன்

A Ramanathan JZ
A Ramanathan JZ

தலைமுறைகள் மாறப்போகிறது ஆனால் நிரந்தர தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை என யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளை பிரதேச செயகத்தில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில், அங்கஜன் இராமநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 14 திகதி யாழ்.வருகை தந்த வீடமைப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட்டம் சம்மந்தமான பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு நிலமைகளை அறிந்து கொண்டுள்ளார்.

அவர்களுக்கு நானும், யாழ்.மாவட்டத்தின் வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக விளக்கம் தெரிவித்திருந்தேன். அந்த விடயம் குறித்து அதிகூடிய கரிசணை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த உறுதியளித்தார்.

அது மட்டுமின்றி வீடமைப்பு தொடர்பான அமைச்சராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, வடபகுதி மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சினை தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.

2009 ஆம் ஆண்டிலிருந்து பல அரசாங்கங்கள் மாறிவிட்டது. நிம்மதியான இருப்பிடங்கள் தேடிய உறவுகளின் தலைமுறைகள் மாறப்போகிறது ஆனால் நிரந்தர தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை.

எமது இந்த புதிய அரசாங்கம் மூலம் விரைவில் காணி அற்றவர்களுக்கான காணி கொள்வனவு, வீடுகள் இல்லாமல் தவிப்போருக்கான வீட்டுத்திட்டங்களை இனம்கண்டு வழங்கல், நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடுகள் வழங்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்று மக்களுக்கு கொடுப்போம்.

ஜனாதிபதி கூட நேற்று இடம்பெற்ற வீடமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலின்போது வட.மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து மீண்டும் உடனடியாக அவர்களை மீள்குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.