சுற்றாடல் நேயமான அரசாங்கமொன்றை அமைப்பதே நோக்கம் – எதிர்க்கட்சி தலைவர்

22 3
22 3

சுற்றாடல் நேயமான அரசாங்கமொன்றை அமைப்பதற்காக அடி மட்டத்திலான கட்டமைப்பை செயற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ‘வெல்வோம்’ தேர்தல் பிரசார நிலையங்களை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்தின் , ஆரம்ப நிகழ்வு நேற்று மாத்தறை மாவட்டத்தை முதன்மைப்படுத்தி இடம்பெற்றுள்ளது.

இதன் போது மாத்தறை – மாலிபட தொகுதியில் ஒகஸ்பே கங்காராம விகாரையில் மண்டபமொன்றை திறந்து வைத்த எதிர்க்கட்சி தலைவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குக் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியை பலமான கட்சியாக மாற்றுவதற்காக அடிமட்டத்திலான கட்டமைப்புகளை செயற்படுத்தும் நோக்கத்தில், நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசார நிலையங்களை ஸ்தாபிக்கும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வுகளே நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் எமது கட்சியை பலப்படுத்துவதுடன் சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எமது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கின்றோம்.

சுற்றாடல் பாதுகாப்புக்காக செயலணியொன்றை அமைத்துள்ள அரசியல் கட்சி என்ற வகையில் , சுற்றாடலுக்கு நேயமான அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே நாங்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம்.

இதேவேளை சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் கட்சிக்குள் மாத்திரமின்றி நாடு பூராகவும் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் சிறு கிராமங்களையும் தெளிவுப்படுத்தவும் எதிர்ப்பார்த்துள்ளோம். அதற்கமைய சுற்றாடலுக்கு நேயமான நாட்டையும் உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.