20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மைகளே தோன்றும் – விதுர விக்ரம நாயக்க

1111 4
1111 4

முரண்பாடுகளுடன் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால்  நல்லாட்சி அரசாங்கத்தின்  தன்மைகளே மீண்டும் தோற்றம் பெறும் என தேசிய மரபுரிமைகள் மற்றும் கலை கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  விதுர விக்ரம நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் பாராளுமன்றத்தின் ஊடாக முழுமையாக  பரிசீலனை செய்யப்படும். 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மற்றும் அதனால் எழுந்துள்ள சர்ச்சைகள்  தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முத்துறைகளுக்குமிடையில் அதிகார முரண்பாட்டை தோற்றுவித்ததாக  இருந்தாலும் நடைமுறையில் பல சாதகமான விடயங்களை கொண்டிருந்தது. மறுபுறம் பாதகமான தன்மைகளையும் கொண்டிருந்தது.  

இவ்வாறான காரணிகளே நல்லாட்சி அரசாங்கத்தை  மலினப்படுத்தியது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம்,  நடைமுறை  அரசியலமைப்பு  திருத்தம் ஆகியவற்றை  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதான இரண்டு தேசிய தேர்தல்களில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது.      

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு  20 ஆவது திருத்தம் தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்டுள்ளமை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் முதற் செயற்பாடாகும்.

புதிய அரசியலமைப்பினை விரைவாக உருவாக்க வேண்டும் என அரசியல்வாதிகள்  குறிப்பிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயதாகும். பல்லின மக்கள் வாழும் நாட்டில் அரசியமைப்பு புதிதாக இயற்றப்படும் போது அனைத்து இன  மக்களின் அரசியல் கருத்துக்களும் கவனத்திற் கொள்ளப்பட்டு அவை முழுமையாக பரிசீலனை செய்யப்பட வேண்டும். இது நீண்ட நாள் நீடிக்கும் ஒரு செயற்பாடாகும் இதற்காகவே சட்ட நிபுணர்களை உள்ளடக்கிய குழு  நியமிக்கப்பட்டுள்ளது.

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தற்காலிக ஏற்பாடாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத் திருத்தத்தில்  காணப்படும் குறைப்பாடுகளை மக்களும் ,பல தரப்பட் ட அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன. வர்த்தமானியில்  வெளியான திருத்தத்தை மீளாய்வு செய்ய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தின் ஊடாக  பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.