உழுந்து பயிர்ச்செய்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு!

20200921151017 IMG 1276
20200921151017 IMG 1276

வவுனியாவில் உழுந்து பயிர்ச்செய்கை அதிகரிப்பது தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆளுனர் சாள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் உழுந்துச்செய்கையின் வீழ்ச்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும், அதிகளவான ஏக்கர்களில் உழுந்து உற்பத்தி இடம்பெற்றுவந்த வவுனியா தற்போது உழுந்து உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக ஆளுனரால் கோரப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றத்தால் 3000 தொடக்கம் 3500 ஏக்கர் வரையிலான உழுந்து பயிர்ச்செய்கை அழிவடைகிறது, இதனால் விவசாயிகள் உழுந்துசெய்கையில் ஈடுபடுவதற்கான ஆர்வம் குறைவடைவதாகவும், உற்பத்தி குறைவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இவ்வருடம் வவுனியா மாவட்டத்தில் 13500 ஏக்கர் அளவில் உழுந்து செய்கை பண்ணப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒருகிலோ விதை உழுந்து 830 ரூபாவிற்கு கொள்வனவுசெய்து, 850 ரூபாவிற்கு விவசாயிகளிற்கு வழங்குவதாக விவசாய திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

உழுந்து பயிர்செய்க்கைக்கு காப்புறுதி திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்துவதாக தொடர்புடைய அமைச்சரால் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உற்பத்தி செய்யும் உழுந்திற்கான விலையினை சரியான முறையில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுனரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.