வவுனியாவிற்கு விஜயம் செய்த இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் ஆலோசகர்

DSC00700
DSC00700

இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் பெண்கள் அணிக்கான ஆலோசகர் அப்சாலி திலகரத்தின நேற்று(22) வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வடக்கு மாகாணத்தில் கிராம மட்டத்தில் கிறிக்கெற் விளையாட்டில் திறமையான விளையாட்டு வீராங்கனைகளை அடையாளம் கண்டு தேசிய மட்டத்தில் அவர்களுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக அப்சாலி திலகரத்தின வவுனியாவிற்கு வருகை தந்திருந்தார்.

வவுனியா இந்துக்கல்லூரிக்கு வருகை தந்த அவர் பாடசாலை அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் வரவேற்கப்பட்டிருந்ததுடன் அதிதிகள் மாணவர்களால் மாலைபோட்டு வரவேற்கப்பட்டதுடன் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

பாடசாலையின் மைதான சூழல் மற்றும் மாணவர்களின் திறமைகளை பரீட்சித்த இலங்கை மகளிர் துடுப்பாட்ட நிறுவனத்தின் பெண்கள் அணிக்கான ஆலோசகர் வவுனியாவில் கோமரசங்குளம் அ.த.க.பாடசாலை, சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம், புதுக்குளம் வித்தியாலயம் மற்றும் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

கோவில்குளம் இந்துக் கல்லூரியில் வருடாந்தம் நடைபெறும் மாபெரும் கிறிக்கெற் சுற்றுப் போட்டிக்கு ஒரு இலட்சம் ரூபா நிதி உதவியினை அப்சாலி திலகரத்தின வழங்கி வருவதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் வை.ரதீபன், மாகாண கிறிக்கெட் பயிற்றுவிப்பாளர் வி.கங்காதரன், மாவட்ட பயிற்றுவிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் என்.வி. சுந்தராங்கன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.