20 க்கு எதிராக ஆறு மனுக்கள் இதுவரை தாக்கல்!

Supreme Court Colombo 1
Supreme Court Colombo 1

20வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்த சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆறு மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய தினம் ஒரு மனுவும் இன்றைய தினம் ஐந்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

20வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் தற்போதைய அரசியல் அமைப்புக்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. இச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் 3ல் 2 பெரும்பான்மையினால் நிறைவேற்றுவதன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்த வேண்டுமென்ற தீர்ப்பை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அம்மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் பா.உ ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனுவின் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 20வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தின் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் 3ல் 2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமென மனுதாரர் தெரிவித்துள்ளார்.

சட்டதரணி இந்திக்க காலகே, அனில் காரியவசம், இலங்கை நியாய முன்னணியின் செயலாளர் நாகாநந்த கொடிதுவக்கு, மாற்று கொள்கைகளுக்கான மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.