மாகாண சபை வேண்டுமா? புதிய அரசமைப்பில் முடிவு – அமைச்சர் பிரசன்ன

எந்தவொரு பயனும் இல்லாதவையாக மாகாண சபைகள் மாறிவிட்டன. எனவே, மாகாண சபை வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானித்தே புதிய அரசமைப்பு கொண்டுவர வேண்டும். அதேவேளை, மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சுயாதீன ஆணைக்குழுக்கள் என உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியில் அவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்படவில்லை. முக்கியமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் சுயாதீனமாகச் செயற்படவில்லை. தன்னை நியமித்த தரப்பினருக்கு விசுவாசத்தைக் காட்டினார்.

முன்னர் எமது ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலம்பெயர் அமைப்புகளின் சார்பாகச் செயற்பட்டார் என்ற காரணத்தால் நல்லாட்சியில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைக்கப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் அவர் மீதுபல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில்தான் சுயாதீன ஆணைக்குழு அரசியல் சார்ந்து இருக்க முடியாது என நாம் தொடர்ந்தும் கூறி வந்தோம். எனவேதான் 19 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்பதே எமது தேர்தல் பிரசாரமாக இருந்தது, 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும். இது தற்காலிக செயற்பாடு மட்டுமே. புதிதாக உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நாடாளுமன்றம் அதற்கான பொறுப்பை ஈர்க்கும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

எனவே, நாம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். இதேவேளை, எந்தவொரு பயனும் இல்லாதவையாக மாகாண சபைகள் மாறிவிட்டன . எனவே, மாகாண சபை வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானித்தே புதிய அரசமைப்பு கொண்டுவர வேண்டும். அதேவேளை, மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு. இந்தநிலையில் புதிய அரசமைப்பு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் என அவர் கூறினார்.