20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் போர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட

puputhu
puputhu

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் முதலில்  தெளிவுப்பெற வேண்டும். பெரும்பான்மை பலத்தை பெற மக்கள் மத்தியில் முன்வைத்த விடயங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்தாமல் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறது என முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  இரண்டு பிரதான தேசிய தேர்தல்களின் போது நாட்டு மக்களுக்கு  பல்வேறு   வாக்குறுதிகளை வழங்கியது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மக்கள்   பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள். ஆட்சியதிகாரத்துக்கு வந்த பின்னர் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள்  திசைத் திரும்பியுள்ளது.

மேல்மட்ட வர்க்கத்தினருக்கு  சார்பாகவே அரசாங்கம் பல  தீர்மானங்களை எடுத்துள்ளது. நடுத்தர மக்கள்  நன்மை பெறும் திட்டங்கள்  ஏதும் முன்வைக்கப்படவில்லை. திட்டங்கள் பெயரளவில் மாத்திரமே செயற்படுத்தப்படுகிறது. பொதுப்போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்தின் கொள்கை  புதிதாக  அறிமுகப்படுத்தி வீதி போக்குவரத்து  ஒழுங்குமுறை ஊடாக அறிந்துக் கொள்ளலாம். இதிலும் நடுத்தர மக்களே   பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 அரசியமைப்பின்  20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில்  பனிபோர் மூண்டுள்ளது. வர்த்தமானியில் வெளியாக 20 ஆவது திருத்தத்தை மீளாய்வு செய்ய பிரதமர்  9 பேர் அங்கிய மீளாய்வு குழுவை நியமித்தார். 20 ஆவது திருத்தத்தில் குறைப்பாடுகள் காணப்படுகின்ற காரணத்தினால் தான் திருத்தம் மீயாள்வு செய்யப்பட்டுள்ளது.

  வாழ்க்கை  செலவுகள் நாளாந்தம்  உயர்வடைந்த நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தத்தினால் அரசாங்கம் முரண்பாடுடன் செயற்படும் போது அதன் விளைவையும் நாட்டு மக்கள் எதிர்க்கொள்ள  நேரிடும். ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து  நாட்டு மக்கள்  அவதானம் செலுத்த வேண்டும்.  அரசாங்கம்  தவறான வழியில் செல்லும் போது தவறை சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு உண்டுடினவும் குறிப்பிட்டுள்ளார்