இன்றைய ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்! ஸ்ரீநேசன் அழைப்பு

srinesan
srinesan

இலங்கையின் தற்போதைய பொதுஜன பெரமுன அரசானது அடக்குமுறைகளை மக்களின் அறவழி போராட்டங்கள் மீது திணித்து வருகிறதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்கள் சார்பாக நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தியாகதீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்து 1987இல் உயிர் நீத்தார்.

நோன்பிருந்த காலத்தில் ஆறாம் நாளன்று தற்போதைய அமைச்சரான வாசுதேவ நியாயமான சாத்வீக போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததோடு, தென்னிலங்கைக்கு இப்போராட்டத்தின் நியாயப்பாட்டினை கொண்டு செல்வதாகவும் கூறியிருந்தார்.

அக்காலத்தில், தென்னிலங்கையில் ஜே.வி.பியினருக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றிருந்தது.

அதன்போது அரசு மனிதவுரிமை மீறல்களை மேற்கொண்டதாக தற்போதைய பிரதமர் அறிக்கைப்படுத்தியதோடு, ஜெனீவாவில் மனிதவுரிமைப் பேரவை வரை கொண்டு செல்வதற்கும் முயற்சித்திருந்தார்.

இப்படியாக அன்று மஹிந்தவும், வாசுதேவவும் மனதவுரிமையில் அக்கறை காட்டினர். இன்று மறைந்த உறவுகளை நினைவுகூர்வதையும், துக்கத்தை அனுஸ்டிப்பதையும் அடக்குமுறைகளால் தடுத்தாடுகின்ற அரசாக ராஜபக்சர்களின் அரசு மாறியள்ளமை வியப்பை அளிக்கிறது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணாமலாக்கப்பட்ட உறவுகள் விடயத்திலும் நீதி வழங்கப்படவில்லை.

அதேவேளை, 26.09.2020 அன்று தியாக தீபத்தை நினைவுகூர்ந்து ஆலயங்களில் அடையாள உண்ணா நோன்பிருப்பதையும் பொலிஸார் நீதிமன்றத்தடையுத்தரவு தடுத்துள்ளனர், தடுக்கமுற்பட்டும் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனக்காயங்களை ஆற்றாமல் மென்மேலும் அக்காயங்களுக்கு மேல் பெரிய பெரிய காயங்களை ஏறபடுத்தவே அரசின் அடாவடித்தனங்கள் அமைகின்றன.

அஹிம்சை வழிமுறைகளை தடுப்பதன் மூலமாக இம்சை வழிக்கு மக்களை இழுத்து செல்ல அரசு முயற்சிக்கிறது.

அமைதியான ஆர்ப்பாட்டம், உண்ணா நோன்பு, ஹர்த்தால் அனைத்தையும் அரசு தடுப்பதன் மூலமாக மக்களை விபரீதமான வழிகளை நோக்கி அரசு ஈர்ப்பதாகத் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையை நிறுத்த வேண்டும் எனவும், இந்த நிலையை தொடரவிடக்கூடாது என்ற வகையில் தான் இன்றைய தினம் ஹர்த்தால் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களை தவிர்த்து ஏனையவர்கள் ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.