நாமல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறினார் – துரைராசா ரவிகரன்!

IMG 0461 resized 2
IMG 0461 resized 2

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் நிதிகள் கிடைக்கப்பெறாததால், இடை நடுவே நிறுத்திவைக்கப்ட்டுள்ளன.

இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான, உதவிகளை ஆறு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக நாமல் ராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்தார்.தற்போது ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த வாக்குறுதியை நாமல் ராஜபக்ச நிறைவேற்றவில்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று(29) இடம்பெற்ற நிலையில் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் வீட்டுத்திட்டம், மாதிரிக் கிராம வீட்டுத்திட்டம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களுக்கான நிதிகள் கிடைக்கப்பபெறாமையினால் குறித்த திட்டங்கள் இடை நடுவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனவே குறித்த திட்டங்களுள் உள்ளீர்க்கப்பட்ட பயனாளிகள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசப்பட்டது.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், நாமல் ராஜபக்ஷ ஆறு மாதகாலத்திற்குள் குறித்த வீட்டுத்திட்டங்கள் தொடர்பான உதவிகளை பெற்றுத் தருவதாக கூறியிருந்ததாக கடந்த கூட்டத்தின் அறிக்கையும் சுட்டிக்காட்டுகின்றது.

இந்த மக்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் வாக்குறுதி வழங்கியிருந்தும், அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் தற்போதும் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். இதை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன் என்றார் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.