இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர்

22 5
22 5

மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க வேண்டிய பாரிய பொறுப்பும், கடப்பாடும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடையதாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்து கல்லூரியின் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு இதன்போது பிரதமரினால் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கல்லூரியின் அதிபர் டி.பீ.பரமேஸ்வரனினால், பிரதமருக்கு 2019ஆம் ஆண்டுக்கான கல்லூரி மலரும், நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டது.

இந்தவிழாவில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்து கல்லூரியின் பரிசளிப்பு விழாவிற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் மொழி பண்பாட்டு அம்சங்களைக்கொண்டு இயங்கும் ஒரு தேசிய பாடசாலையான இந்தக் கல்லூரி, சிறந்த கல்விமான்களையும், சமூகப்பொறுப்புள்ள மாணவர்களையும் எதிர்காலத்தின் நற்பிரஜைகளையும் தந்துள்ளது.

இந்த மாணவர்களே நாட்டின் எதிர்கால தலைவர்களாவர்.

நல்ல மாணவர்களை உருவாக்குதல் பாடசாலைகளின் பணியாவதுடன், அவர்களின் எதிர்காலத்தினை நல்வழிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பும் கடப்பாடும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடையதாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.